தஞ்சை மேலவஸ்தாசாவடி அருகே சாலையை ஆக்கிரமித்து கிடக்கும் மணல் குவியலால் அடிக்கடி நடக்கும் விபத்துகள்
தஞ்சை மேலவஸ்தாசாவடி அருகே சாலையை ஆக்கிரமித்து கிடக்கும் மணல் குவியலால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க சாலைகளில் குவிந்து கிடக்கும் மணலை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிள்ளையார்பட்டி,
தஞ்சை-புதுக்கோட்டை சாலையில் மேலவஸ்தாசாவடியை அடுத்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழக குடோன் எதிர்புறம் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் முன்பு சாலையோரங்களில் மட்டும் மணல் குவிந்து கிடந்தது.இந்த மண் குவியல் பல மாத காலமாக அகற்றப்படாததால் தற்போது சாலையின் பெரும்பாலான பகுதியை ஆக்கிரமித்து மணல் குவிந்து கிடக்கிறது. அதிலும் இந்திய உணவு பதன ெதாழில்நுட்ப கழகத்தில் இருந்து விமான படைத்தளம் வரையில் இ்ந்த சாலையில் இருசக்கர வாகனங்களே செல்ல முடியாத நிலையில் மண் குவியலாக காணப்படுகிறது.
ஒரே நேரத்தில் இரு வாகனங்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சாலையில் மணல் குவிந்து கிடப்பதால் தற்போது ஒரு வாகனம் மட்டுமே செல்கிறது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
இங்கு அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக குடோனுக்கு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் வந்து செல்கின்றன. இதன் காரணமாக இந்த சாலை பகல்பொழுது முழுவதும் பரபரப்பாகவே காணப்படும்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையில் குவிந்து கிடக்கும் மணல் பலமாதங்களாக அகற்றப்படாமல் கிடப்பதால் சாலையின் மையப்பகுதியில் மட்டுமே வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. தப்பித்தவறி சாலையின் ஓரத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையே உள்ளது.
சாலையின் ஒரு பகுதி முழுவதும் குவிந்து கிடக்கும் மணல் பரப்பின் வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகிறார்கள். மேலும் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கும் மணல் காரணமாக இந்த சாலையில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகுந்த சிரமத்துடனும், ஒருவிதமாக அச்சத்துடனும் சென்று வருகிறார்கள்.
எனவே இந்த சாலையில் குவிந்து கிடக்கும் மணலை உடனடியாக அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story