தஞ்சையின் மையப்பகுதியில் அசுத்தமான நிலையில் புதுஆற்றங்கரை நடைபாதை கழிவறை வசதி ஏற்படுத்த மக்கள் கோரிக்கை
தஞ்சை மையப்பகுதியில் அசுத்தமான நிலையில் புதுஆற்றங்கரை நடைபாதை உள்ளது. இதை சுத்தம் செய்வதுடன் கழிவறை வசதி ஏற்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தஞ்சாவூர்,
கல்லணையில் இருந்து காவிரி டெல்டா பகுதி பாசனத்திற்கு காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக்கால்வாய் எனப்படும் புதுஆறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் பிரித்துவிடப்படும். இதில் புதுஆறு தஞ்சை நகரின் மையப்பகுதி வழியாக ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை வழியாக புதுக்கோட்டை வரை செல்கிறது.
இந்த புதுஆற்றில் இர்வின்பாலத்தில் இருந்து எம்.கே. மூப்பனார் சாலையில் உள்ள பாலம் வரை ஆற்றின் இரு கரையிலும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நடைபயணம் செல்வோர் ஆங்காங்கே அமருவதற்கு இருக்கைகளும் போடப்பட்டுள்ளன. இந்த நடைபாதைக்கு மாமன்னன் ராஜராஜசோழன் நடைபாதை என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தஞ்சை எம்.கே.மூப்பனார் சாலையில் புதுஆற்றங்கரை படித்துறை மற்றும் நடைபாதையில் அமர்ந்து ஏராளமானோர் மது அருந்துகின்றனர். மது அருந்திவிட்டு பாட்டில்கள், பிளாஸ்டிக் கப், பாக்கெட் போன்றவற்றை ஆற்றில் வீசிவிட்டு செல்கின்றனர். சிலர் படித்துறையிலும், நடைபாதையிலும் பாட்டில்களை உடைத்துவிட்டு செல்கின்றனர்.
இதனால் ஒரு கரையில் உள்ள நடைபாதை அடைக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் அந்த நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மறுகரையில் உள்ள நடைபாதையில் மட்டுமே நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நடைபாதையை போல் இர்வீன்பாலத்தில் இருந்து பெரியகோவில் அருகே உள்ள புதுஆற்றுப்பாலம் வரை ஆற்றின் இரு கரையிலும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபாதைக்கு பேரரசன் கரிகால்சோழன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தாசில்தார் அலுவலக பின்புற பகுதி, பழைய கலெக்டர் அலுவலக பின்புற பகுதி வழியாக சுமார் 540 மீட்டர் நீளமும், 2 மீட்டர் அகலத்துடனும் மின் விளக்குகள் வசதிகளுடன் நடைபாதை அமைக்கப்பட்டது. இதற்காக ரூ.1 கோடியே 28 லட்சம் செலவு செய்யப்பட்டது. இந்த நடைபாதை கடந்த 2013-ம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்துவிடப்பட்டது. பல ஆண்டுகள் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொண்டனர்.
பொதுமக்களின் பாதுகாப்புக்காக இரும்பு கம்பியிலான தடுப்பு கம்பிகளும் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே மின் விளக்குகளும் அமைக்கப்பட்டு இரவு நேரத்தில் ஆற்று தண்ணீரை ரசித்து கொண்டே நடை பயிற்சி போகும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. தரையில் டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் வரி பணத்தால் போடப்பட்ட இந்த நடைபாதை தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நடைபாதையில் பலர், சிறுநீர் கழித்துவிட்டு செல்வதுடன் சிலர் இயற்கை உபாதைகளையும் கழித்துவிடுகின்றனர். இதனால் அசுத்தமான நிலையில் காணப்படுவதுடன் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அந்த வழியாக செல்வதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டனர்.
இர்வீன்பாலம் அருகே பொது கழிப்பறை கட்டினால் மக்கள் நடைபாதையை அசிங்கப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க முடியும். எனவே பொது கழிவறை கட்ட சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பதுடன் பேரரசன் கரிகால்சோழன் நடைபாதை, மாமன்னன் ராஜராஜசோழன் நடைபாதையை முறையாக பராமரிக்க முன்வர வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.
இரும்பு கம்பிகள் திருட்டு; மாயமான விளக்குகள்
பேரரசன் கரிகால் சோழன் நடைபாதையில் பல இடங்களில் இரும்பு கம்பிகள் பெயர்த்து எடுக்கப்பட்டு மர்மஆசாமிகள் திருடி சென்றுவிட்டனர். பெரியகோவில் புதுஆற்றுப்பாலம் அருகே தடுப்பு இன்றி ஆபத்தான நிலையில் நடைபாதை உள்ளது. மின் விளக்குகளும் மாயமாகி விட்டது. சமூக விரோதிகள் உடைத்துவிட்டு இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கு வசதியாக நடைபாதை தற்போது பயன்படுத்த முடியாத நிலையை வேண்டுமென்றே உருவாக்கி உள்ளனர். எனவே திருடப்பட்ட இடங்களில் கம்பிகளை மீண்டும் பொருத்த நடவடிக்கை எடுப்பதுடன், மின்விளக்குகளையும் புதிதாக பொருத்தி எரிய வைக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
மேலும் நடைபாதையின் நுழைவு பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தொடர்ந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டால் கம்பிகள் திருடப்படுவதை தடுக்கலாம். மேலும் சமூகவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் நடைபாதை பகுதிக்குள் வர மாட்டார்கள். எனவே பெரியகோவில் புதுஆற்றுப்பாலம் முதல் எம்.கே.மூப்பனார் சாலை பாலம் வரை நடைபாதையை புதுப்பொழிவு அடைய செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாகும்.
Related Tags :
Next Story