பேக்கரி கடைக்காரர் சாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நண்பர் கைது
பண்ருட்டி அருகே பேக்கரி கடைக்காரர் சாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு, அவரது நண்பர் கைது செய்யப்பட்டார். பணம், நகைக்காக கொன்றதாக அவர் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுப்பேட்டை,
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 55). இவர் அதே பகுதியில் பேக்கரி கடை நடத்தி வந்தார்.
இவர் கடந்த 2019-ம் ஆண்டு அதே கிராமத்தில் உள்ள விநாயகர் கோவில் அருகே தலையில் அடிபட்டு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆனால் இது பற்றி போலீசுக்கு உறவினர்கள் தகவல் தெரிவிக்காமல் அவரது உடலை அடக்கம் செய்து விட்டனர்.
பெண் கொலை வழக்கில் கைது
இந்த நிலையில் பண்ருட்டியில் இட்லி வியாபாரம் செய்த சரசு(67) என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் ராஜேந்திரன் மகன் விசுவநாதனை (33) என்பவரை போலீசார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அதாவது பணம், நகைக்காக பத்மநாபனையும் கொலை செய்ததாக கூறினார்.
அது பற்றி அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
நகை, பணத்துக்காக...
நானும், மணப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பத்மநாபனும் நண்பர்கள். நாங்கள் இருவரும் கடந்த 2.4.2019 அன்று விநாயகர் கோவில் அருகில் அமர்ந்து மது குடித்தோம். அப்போது பத்மநாபன் கையில் மோதிரம் அணிந்திருந்தார். சட்டைப்பையில் பணம் வைத்திருந்தார். அதை பறிக்க திட்டம் தீட்டினேன். பத்மநாபன் மதுபோதையில் இருந்தபோது கட்டையால் தலையில் ஓங்கி அடித்தேன். அவர் மயங்கி விழுந்து இறந்தார். இதையடுத்து நகைகையும், பணத்தையும் பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டேன். அவரது இறப்பு குறித்து யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாததால் நானும், எதுவும் நடக்காதது போல் நடந்து கொண்டேன். தற்போது போலிசில் சிக்கிக்கொண்டேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உடல் தோண்டி எடுப்பு
இதையடுத்து விசுவநாதனை புதுப்பேட்டை போலீசார் கைது செய்து, மீண்டும் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் பண்ருட்டி தாசில்தார் பிரகாஷ் முன்னிலையில் நேற்று பத்மநாபன் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர் கீதாஞ்சலி உடற்கூறு ஆய்வு செய்தார். பின்னர் அதே இடத்தில் உடல் புதைக்கப்பட்டது.
2 ஆண்டுகளுக்கு பிறகு பேக்கரி கடைக்காரர் இறந்த வழக்கில் அவர் நண்பர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story