தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தினசரி கூலி ரூ.300 ஆக உயர்த்தி வழங்க விரைவில் நடவடிக்கை


தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் தினசரி கூலி ரூ.300 ஆக உயர்த்தி வழங்க விரைவில் நடவடிக்கை
x
தினத்தந்தி 22 July 2021 10:17 PM IST (Updated: 22 July 2021 10:17 PM IST)
t-max-icont-min-icon

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு தினசரி கூலி ரூ.300 ஆக உயர்த்தி வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்

உளுந்தூர்பேட்டை

ஊரக வேலை உறுதி திட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மேட்டத்தூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் வரத்து வாய்க்கால், கசிவுநீர் குட்டைகள் அமைக்கும் பணிகளை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

அப்போது அங்கிருந்த தொழிலாளர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர் பெரியகருப்பன், கடந்த அ.தி.மு.க. ஆட்சிகாலத்தில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு தினசரி கூலி ரூ.260 வழங்கப்பட்டது. இதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.273 ஆக உயர்த்தி உள்ளார். விரைவில் ரூ.300 ஆக உயர்த்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 
அதைத்தொடர்ந்து செம்பியன்மாதேவி கிராமத்தில் இருந்து அலங்கிரி கிராமத்திற்கு செல்லும் ஊராட்சி சாலை அமைக்கும் பணியை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். 

ரூ.1 லட்சம் கடன் உதவி

பின்னர் அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டு தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வாழவந்தான்குப்பத்தில் மகளிர்சுய உதவி குழுவினர் நடத்தி வரும் ஹாலோ பிளாக் செங்கல் உற்பத்தி செய்யும் சிறு தொழிற்சாலையை ஆய்வுசெய்த அமைச்சர்கள், சுய உதவிக்குழுவினரை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு ரூ.1 லட்சம் கடன் உதவிக்கான காசோலையையும் வழங்கினார்கள். 

இதைத்தொடர்ந்து தியாகதுருகம்-திருக்கோவிலூர் சாலையில் சுய உதவிக் குழுவினர் அமைத்துள்ள பசுமை நர்சரி தோட்டத்தை ஆய்வு செய்த அமைச்சர்கள், இந்த பகுதி விவசாயம் சார்ந்த பகுதியாக உள்ளதால் பழ கன்றுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம் எனவும் ஆலோசனை வழங்கினார்கள்.

குடிநீர் இணைப்பு

அதன் பிறகு வடதொரசலூர் கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் இணைப்பு ஆகியவற்றை ஆய்வு செய்த அமைச்சர்கள்,  வீட்டின் உரிமையாளர்களிடம் குடிநீர் இணைப்பு எப்போது வழங்கப்பட்டது, குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார். 

இந்த ஆய்வின்போது எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன், ஊரகவளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் கோபால், இயக்குனர் பிரவீன் பி.நாயர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் மரியம் பல்லவி பல்தேவ், கூடுதல் இயக்குனர் குமார், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், திட்ட இயக்குனர் முருகண்ணன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மஞ்சுளா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகணேஷ், அண்ணாதுரை, மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன், தியாகதுருகம் வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், தெற்கு ஒன்றிய துணை செயலாளர் அண்ணாதுரை, மாவட்டஇளைஞர் அணி அமைப்பாளர் தாகப்பிள்ளை, முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் பி.கே.முரளி, மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், மூக்கப்பன், கென்னடி, ராமமூர்த்தி, எத்திராஜ், மலையரசன், பெருமாள் உள்பட முன்னணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக தியாகதுருகம் மவுண்ட் பார்க் மழலையர் பள்ளி முன்புறம் உள்ள மறைந்த தி.மு.க. நகர செயலாளர் ராமகிருஷ்ணனின் உருவ படத்துக்கு அமைச்சர்கள் பெரியகருப்பன், பொன்முடி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


Next Story