நகராட்சி வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம்


நகராட்சி வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டம்
x
தினத்தந்தி 22 July 2021 4:58 PM GMT (Updated: 2021-07-22T22:28:24+05:30)

நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணையாற்றில் நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை கொட்டினர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லிக்குப்பம், 

நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை ஊழியர்கள் நகராட்சி வாகனங்கள் மூலம் அள்ளிச் சென்று கீழ்பட்டாம்பாக்கம் மற்றும் கீழ்பாதி பகுதிகளில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டி வந்தனர். தற்போது கீழ்பட்டாம்பாக்கம் குப்பை கிடங்கில் குப்பைகள் தரம் பிரிக்கும் பணிகள் நடைபெறுவதாலும், கீழ்பாதியில் குப்பை கொட்ட அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தன் காரணமாகவும் நெல்லிக்குப்பம் நகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வாகனங்கள் மூலம் நெல்லிக்குப்பம் அடுத்த விஸ்வநாதபுரம் தென்பெண்ணாற்றிலும், அதன் கரையையொட்டி  உள்ள விளை நிலங்களிலும் கொட்டப்பட்டு வந்தது.
இதற்கு விஸ்வநாதபுரம் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் இங்கு குப்பை கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி நகராட்சி குப்பை வாகனத்தை அடிக்கடி சிறைபிடிப்பது, சாலை மறியல் செய்வது போன்ற பல்வேறு போராட்டங்களில் அடிக்கடி ஈடுபட்டு வந்தனர். 

வாக்குவாதம்

இந்த நிலையில் நகராட்சி ஊழியர்கள் நெல்லிக்குப்பம் நகரில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை வாகனத்தில் ஏற்றி வந்து விஸ்வநாதபுரம் தென்பெண்ணையாற்றின் கரையில் நேற்று காலை கொட்டிக் கொண்டிருந்தனர். இதைபார்த்து ஆத்திரமடைந்த தென்பெண்ணையாறு கரையோர விவசாயிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து, நகராட்சி குப்பை வாகனத்தை சிறை               பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்த முயன்றார். அப்போது தென்பெண்ணையாறு மற்றும் கரையோர விளைநிலப்பகுதியில் குப்பை கொட்டுவதற்கு பலமுறை எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியும் நீங்கள் கேட்பதில்லை. ஆகையால் இந்த முறை சிறைப்பிடித்த குப்பை வாகனத்தை கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளோம் என திட்டவட்டமாக கூறி, அவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதி மக்கள் இனிவரும் காலங்களில் இந்த பகுதியில் குப்பைகளை கொட்டமாட்டோம் என நகராட்சி நிர்வாகம் சார்பில் கடிதம் கொடுத்தால் மட்டுமே வாகனத்தை விடுவிப்போம் என திட்டவட்டமாக கூறினர். 

வருத்தம் தெரிவித்த அதிகாரி

அதைத் தொடர்ந்து நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல் நிர்வாகம் சார்பில் விஸ்வநாதபுரம் பகுதி மக்களிடம் வருத்தம் தெரிவித்து எழுத்து பூர்வமாக ஒரு கடிதம் கொடுத்தார். அந்த கடிதத்தில், வருங்காலங்களில் விஸ்வநாதபுரம் தென்பெண்ணையாறு மற்றும் கரையோர பகுதிகளில் குப்பைகள் கொட்டுவது தவிர்க்கப்படும் என கூறியிருந்தார். இதையடுத்து பொதுமக்கள் நகராட்சி வாகனத்தை விடுவித்தனர். குப்பை கொட்டுவது தொடர்பாக நகராட்சி அதிகாரி வருத்தம் தெரிவித்து பொதுமக்களிடம் கடிதம் கொடுத்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலானது. இதனால் நகராட்சி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.  

Next Story