கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொட்டும் மழையிலும் காத்திருந்து தடுப்பூசி போட்ட பொதுமக்கள்


கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொட்டும் மழையிலும் காத்திருந்து தடுப்பூசி போட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 22 July 2021 5:15 PM GMT (Updated: 2021-07-22T22:45:43+05:30)

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொட்டும் மழையிலும் பொதுமக்கள் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொட்டும் மழையிலும் பொதுமக்கள் காத்திருந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். 

கொரோனா தடுப்பூசி 

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொரோனா 2-வது அலை காரணமாக தொற்று எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டிவிட்டது. எனவே தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை காரணமாக தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

பற்றாக்குறை காரணமாக கடந்த 5 நாட்களாக தடுப்பூசி போடவில்லை. இதனால் பொதுமக்கள் தடுப்பூசி போடும் முகாம்களுக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். 

கொட்டும் மழையில் காத்திருந்தனர் 

இந்த நிலையில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளி, சிங்கையன்புதூர், காட்டம்பட்டி, செட்டியக்காபாளையம் ஆகிய பகுதிகளில் தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டது. 

இதையடுத்து அதிகாலை முதலே தடுப்பூசி போடும் மையங்களில் பொதுமக்கள் திரண்டனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று டோக்கன்களை பெற்றனர். 

தொடர்ந்து காலையில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அப்போது மழை கொட்டியது. இருந்தபோதிலும் மழையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் காத்திருந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 

1,570 பேர் 

சிலர் மழையில் நனையாதபடி பள்ளியில் ஒதுங்கி நின்றனர். தடுப்பூசி போடும் பணியை தாசில்தார் சசிரேகா பார்வையிட்டார். அப்போது வரிசையில் நின்ற பொதுமக்களிடம் சமூக இடைவெளி விட்டு நிற்குமாறு அறிவுரை வழங்கினார். 

நல்லட்டிபாளையம் வட்டார மருத்துவ அதிகாரி சித்ரா தலைமை யில் நடந்த இந்த முகாமில் 1,570 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இருந்தபோதிலும் அங்கு ஏராளமானோர் குவிந்ததால் அதில் பலர் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். 

சுல்தான்பேட்டை ஒன்றியம் 

சுல்தான்பேட்டை ஒன்றியம் வா.சந்திராபுரம், சின்ன வதம்பச்சேரி ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் இடையர்பாளையம், அக்கநாயக்கன்பாளையம், பெரிய வதம்பச் சேரி, எஸ்.அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா 250 வீதம் மொத்தம் 1000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.  

மேலும் சுல்தான்பேட்டையில் உள்ள நூற்பாலை, கோழிப்பண்ணை தொழிலாளர்கள் 109 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. 

இதில் டாக்டர்கள் பவித்ரா, சுந்தர், கிருஷ்ண பிரபு, சந்தோஷ்லேனா மற்றும் செவிலியர்கள் உள்பட பலர் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார மேற்பார்வையாளர் முருகதாஸ், சுகாதாரஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story