கோட்டூர் அருகே, கருகும் குறுவை பயிர்கள்: ஆற்றில் தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
கோட்டூர் அருகே கருகும் குறுவை பயிர்களை காப்பாற்ற ஆற்றில் தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோட்டூர்:-
கோட்டூர் அருகே கருகும் குறுவை பயிர்களை காப்பாற்ற ஆற்றில் தண்ணீர் திறந்து விடக்கோரி விவசாயிகள் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருகும் குறுவை பயிர்கள்
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சபாபதிபுரம், சோமாசி, புழுதிகுடி, கீழ புழுதிகுடி தெற்குலேரி, கீழ்பாதி ஆகிய கிராமங்களுக்கு முள்ளியாறு பிரிவு பாப்பான் வாய்க்கால், பொண்ணு வாய்க்கால், அரிச்சந்திரா நதி பிரிவு பெரிய வாய்க்கால் ஆகிய பாசன வாய்க்கால்கள் மூலம் சாகுபடி நடைபெற்று வருகிறது. மேட்டூர் அணை கடந்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரை நம்பி இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் 600 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் 90 நாள் வயதுடைய நெல் விதைகளை விதைத்து உள்ளனர். அந்த பயிர்கள் வளர்ந்து 30 நாட்கள் ஆகின்றன.
ஒரு முறை மட்டும் இந்த பாசன வாய்க்கால்களில் தண்ணீர் வந்து பயிர்களுக்கு விடப்பட்டது. தற்போது வாய்க்கால்களில் தண்ணீர் இல்லாமல் குறுவை பயிர்கள் அனைத்தும் கருகி வருகிறது. இந்த நிலையில் விவசாயிகள் உடனடியாக அரிச்சந்திரா நதி, முள்ளியாறு ஆகிய ஆறுகளில் தண்ணீரை திறந்துவிட்டு கருகும் குறுவை பயிர்களை பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வயலில் இறங்கி ஆர்ப்பாட்டம்
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று அந்த பகுதி விவசாயிகள் கீழபுழுதிகுடியில் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மேட்டூர் அணையில் போதுமான தண்ணீர் உள்ளது. குறுவை சாகுபடி செய்யுங்கள். போதுமான விதை மற்றும் உரம் கையிருப்பில் உள்ளதாக தமிழக அரசு கூறியது. அதன்படி நேரடி நெல் விதைப்பு செய்தோம். மேட்டூர் அணை திறந்து 1½ மாதங்கள் ஆகி உள்ள நிலையில் இதுவரை ஒருமுறை மட்டுமே வாய்க்காலில் தண்ணீர் வந்துள்ளது. தேவையான தண்ணீர் இன்றி குறுவை பயிர்கள் கருகி வருகின்றன. இங்கு ஆழ்துளை கிணறு வசதி இல்லாததால் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை.
தண்ணீர் இல்லாமல் உரம் போட முடியவில்லை. இதனால் பயிர்கள் வளர்ச்சி குன்றி கருகி வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் தண்ணீர் வரவில்லை என்றால் குறுவை பயிர்கள் முற்றிலும் அழிந்து விடும். எனவே வேளாண்மை துறை அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு ஆறுகளில் உடனடியாக தண்ணீர் திறந்து விட்டு கருகி வரும் பயிர்களை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
Related Tags :
Next Story