1¾ லட்சம் மலர் செடிகள் நடும் பணி தொடக்கம்
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு 1 லட்சத்து 70 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
ஊட்டி,
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு 1 லட்சத்து 70 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
சிம்ஸ் பூங்கா
நீலகிரி மாவட்டம் குன்னூரில் தோட்டக்கலைத் துறை கட்டுப்பாட்டில் சிம்ஸ் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசனும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசனும் நடைபெறுவது வழக்கம்.
அங்கு கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோடை சீசனின்போது நடைபெறும் பழக்கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. சுற்றுலா பயணிகளை கவருவதற்காக நடவு செய்த மலர்கள் பூத்து ஓய்ந்தன.
2-வது சீசனுக்கான...
தற்போது கொரோனா பரவல் குறைந்தாலும், சுற்றுலா தலங்கள் திறக்க அனுமதி இல்லை. இருப்பினும் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர தடை இல்லை. விரைவில் சுற்றுலா தலங்கள் திறக்க வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிம்ஸ் பூங்காவில் 2-வது சீசனுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அங்கு நேற்று மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கியது. தோட்டக்கலை உதவி இயக்குனர் பெபிதா மலர் செடிகளை நடவு செய்து பணியை தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக பிரஞ்ச் மேரிகோல்டு, பால்சம் செடிகள் நடவு செய்யப்படுகிறது.
மலர் செடிகள் நடவு
அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளை தாயகமாக கொண்ட டேலியா, சால்வியா, பிளாகஸ், ஜின்னியா, பெகோனியா, பேன்சி, டெல்பினியம், ஜெரானியம், பெட்டுனியா, ஸ்டாக்ஸ், கேலன்டுலா, ஸ்வீட் வில்லியம், பிரிமுளா, லுபின், ஆஸ்டர் உள்பட 75-க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 1 லட்சத்து 70 ஆயிரம் மலர் செடிகள் பூங்காவின் பல்வேறு பகுதிகளில் நடவு செய்யப்பட உள்ளது. நிகழ்ச்சியில் தோட்டக்கலை அலுவலர்கள் லட்சுமணன், கவின்யா கலந்துகொண்டனர்.
நடைபாதை ஓரங்கள், மரங்களை சுற்றிலும் மலர் பாத்திகளில் இயற்கை உரம் போட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. பூங்காவில் மலர் செடிகளை ஊழியர்கள் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story