நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை


நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை
x
தினத்தந்தி 22 July 2021 6:08 PM GMT (Updated: 2021-07-22T23:39:26+05:30)

நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. மேலும் சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

விடிய விடிய மழை

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரை விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சூறாவளி காற்று வீசியதால் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். இந்த மழை நேற்று பகலிலும் தொடர்ந்தது.

ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்காராவில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் மரத்தை வெட்டி பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.

மரங்கள் விழுந்தன

மேலும் ஊட்டி-இத்தலார் சாலையில் முத்தோரை பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. அங்கு ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேம் மற்றும் வீரர்கள் சென்று மரத்தை வெட்டி அகற்றினர்.இது தவிர ஊட்டி குளிச்சோலை, ஆர்.சி.காலனியில் 2 மரங்கள் முறிந்து விழுந்தன. இதனை தீயணைப்பு வீரர்கள் துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். ஊட்டி கேஷினோ சந்திப்பு பகுதியில் விழுந்த மரத்தை பொதுமக்கள் உதவியுடன் போலீசார் வெட்டி அகற்றினர். 

தடுப்புச்சுவர் இடிந்தது

கூடலூரில் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்து வந்தது. இதனால் அரசு மற்றும் தனியார் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்க முடியாமல் திணறினர். மேலும் பொதுமக்கள் தங்களது அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டனர்.

இதற்கிடையே எம்.ஜி.ஆர். நகரில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு அலுவலகத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி சுமார் 10 அடி நீளத்துக்கு உடைந்து விழுந்தது. இந்த சமயத்தில் மழையும் பெய்து கொண்டிருந்ததால் அப்பகுதியில் பொதுமக்கள் யாரும் இல்லை. 

இதனால் அதிர்ஷ்டவசமாக அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. கூடலூர் 2-ம் மைல் அருகே தட்டக்கொல்லி காலனியில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. மஞ்சூர், குன்னூர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. கடும் குளிரால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

மண்சரிவு

பந்தலூர்-கோழிக்கோடு சாலையில் இரும்பு பாலம் அருகே ராட்சத மரம் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் மரத்தை வெட்டி அகற்றினர். பந்தலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து அட்டிக்கு செல்லும் சாலையில் குறியன் என்பவரது வீட்டின் அருகில் மண் சரிவு ஏற்பட்டது. 

மேலும் தடுப்புச்சுவர் இடிந்து, நூர்தீன் என்பவரது வீடு சேதம் அடைந்தது. மஞ்சூர்-கிண்ணக்கொரை, மஞ்சூர்-கோரகுந்தா ஆகிய சாலைகளிலும் மரங்கள் முறிந்து விழுந்தன. நடுவட்டம் பகுதியில் நேற்று மாலை 4 மணிக்கு அமாவாசை காலனிக்கு செல்லும் நடைபாதை கரையோரம் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாதவாறு நடைபாதையை மண் குவியல்கள் மூடியது. தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் தலைமையில் ஊழியர்கள் விரைந்து வந்து மண் குவியலை அகற்றினர். 

மழை அளவு

நீலகிரியில் நேற்று காலை 8 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-  ஊட்டி-23, நடுவட்டம்-57, கிளன்மார்கள்-42, குந்தா-42, அவலாஞ்சி-116, எமரால்டு-37, அப்பர்பவானி-40, பாலகொலா-23, குன்னூர்-11, கூடலூர்-59, தேவாலா-39, செருமுள்ளி-27, பாடாந்தொரை-25, ஓவேலி-38, பந்தலூர்-70, சேரங்கோடு-27 என மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக அவலாஞ்சியில் 11 சென்டி மீட்டர் மழை பதிவானது.Next Story