வீட்டில் பதுக்கி வைத்த 4¼ டன் ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவர் கைது
சின்னசேலம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 4¼ டன் ரேஷன் அரிசியை விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக ஒருவரை கைது செய்தனர்.
விழுப்புரம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பால்ராம்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கல்பனா தலைமையிலான போலீசார் நேற்று தகவல் கிடைக்க பெற்ற பால்ராம்பட்டு தெற்கு தெருவில் உள்ள ஒரு வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டில் தலா 50 கிலோ எடை கொண்ட 87 சாக்கு மூட்டைகளில் 4,350 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒருவர் கைது
இதையடுத்து வீட்டின் உரிமையாளரான முருகன் (வயது 56) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் கடந்த சில மாதங்களாக பால்ராம்பட்டு, கரடிசித்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதி பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதனை கர்நாடகா மாநிலத்திற்கு கொண்டு சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதைத்தொடந்து போலீசார், முருகனை கைது செய்ததோடு, அவருடைய வீட்டில் பதுக்கிய 4,350 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.
அதன்பிறகு, பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகள், கள்ளக்குறிச்சியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story