இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை: திருச்சியில் பூக்கள் விலை உயர்வு கனகாம்பரம் கிலோ ரூ.500-க்கு விற்பனை


இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை: திருச்சியில் பூக்கள் விலை உயர்வு கனகாம்பரம் கிலோ ரூ.500-க்கு விற்பனை
x
தினத்தந்தி 22 July 2021 7:12 PM GMT (Updated: 22 July 2021 7:12 PM GMT)

ஆடி முதல் வெள்ளிக்கிழமை இன்று வருவதையொட்டி, பூக்கள் விலை உயர்ந்தது. கனகாம்பரம் கிலோ ரூ.500-க்கு விற்பனை ஆனது.

திருச்சி, 

ஆடி முதல் வெள்ளிக்கிழமை இன்று வருவதையொட்டி, பூக்கள் விலை உயர்ந்தது. கனகாம்பரம் கிலோ ரூ.500-க்கு விற்பனை ஆனது.

அம்மனுக்கு உகந்த மாதம்

ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில், பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபட்டு வேண்டுதலை நீறைவேற்றுவது வழக்கம். இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை ஆகும். இன்றைய தினம் திருவானைக்காவல், சமயபுரம், உறையூர், தென்னூர் உள்பட திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். ஆடி முதல் வெள்ளியன்று லட்சுமியை வரம் வேண்டி விரதம் இருந்து வழிபடுவர். 

இரண்டாம் வெள்ளியில் அங்காள பரமேஸ்வரி, காளி, துர்க்கை அம்மனை வழிபடுவர். மூன்றாம் வெள்ளியன்று அன்னை பார்வதி, காளியம்மனை வழிபடுவர். நான்காம் வெள்ளியன்று காமாட்சி அன்னையை வழிபடுவர். ஐந்தாம் வெள்ளியன்று வரலட்சுமி பூஜை நடைபெறுவது வழக்கம். 

பவுர்ணமிக்கு முன்னே அஷ்ட லட்சுமிகளையும் வழிபடுவதாக அமையும். இன்றைய தினம் பவுர்ணமி என்று சொல்லக்கூடிய குருபூர்ணிமாவும் இணைந்தே வருகிறது.

பூக்கள் விலை உயர்வு

ஆடி வெள்ளியன்று கோவில்களுக்கு பூக்கள் வாங்கி செல்வதற்காக நேற்று காந்தி மார்க்கெட், ஸ்ரீரங்கம் மார்க்கெட் ஆகியவற்றில் கூட்டம் அலைமோதியது. மேலும் பூக்கள் வரத்து காற்று காரணமாக வெகுவாக குறைந்து இருந்தது. இதனால் வழக்கத்தைவிட 25 சதவீதம் பூக்கள் விலை உயர்ந்துள்ளதாக திருச்சி காந்தி மார்க்கெட் புஷ்ப கமிஷன் வியாபாரிகள் சங்க தலைவர் குத்புதீன் தெரிவித்தார்.

திருச்சியில் நேற்று பூக்கள் விலை கிலோவில் வருமாறு:-  (நேற்றைய முன்தினம் விலை அடைப்புக்குறிக்குள்)

மல்லிகைப்பூ-ரூ.350 (250), செவ்வந்தி-ரூ.150 (70), சம்பங்கி-ரூ.200 (120), முல்லை-ரூ.300 (220), ஜாதிமல்லி-ரூ.300 (220), பிச்சிப்பூ-ரூ.100 (60), அரளி-ரூ.300 (200), கனகாம்பரம்-ரூ.500 (400).

Next Story