சேலம், ஓசூரில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை


சேலம், ஓசூரில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 23 July 2021 1:38 AM IST (Updated: 23 July 2021 1:38 AM IST)
t-max-icont-min-icon

சேலம் ஓசூரில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சேலம்
சேலம், ஓசூரில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆய்வு
தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று சேலம் வந்தார். பின்னர் அவர் அஸ்தம்பட்டியில் உள்ள டவுன் தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வரும் அரசு இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து அங்கிருந்த அலுவலர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து இ-சேவை மையங்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது எவ்வளவு நேரத்தில் தீர்வு காணப்படுகிறது என்பது குறித்தும், அங்குள்ள ஆதார் சேர்க்கை மையத்தின் செயல்பாடுகள் குறித்தும் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் சேலம் அம்மாபேட்டையில் கடந்த 20 ஆண்டுகளாக மூடப்பட்டு இருக்கும் கூட்டுறவு நூற்பாலை உள்ள இடத்தை அவர் பார்வையிட்டார். அப்போது, அவர் அங்குள்ள வளாகத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அலகு-2 தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அமைச்சர், சூரமங்கலத்தில் உள்ள மேற்கு தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று இசேவை மையத்தின் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை
இதையடுத்து ஜாகீர் அம்மாபாளையம் பகுதியில் இயங்கி வரும் தகவல் தொழில்நுட்ப பூங்கா கூட்ட அரங்கில் தனியார் மென்பொருள் நிறுவனத்தினர் மற்றும் எல்காட் அதிகாரிகளுடன் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆலோசனை நடத்தினார். 
அப்போது, தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தில் மேலும் புதிய மென்பொருள் (ஐ.டி. நிறுவனம்) நிறுவனங்களை அமைப்பது தொடர்பாகவும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது பற்றியும் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
பேட்டி
இதைத்தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று எல்காட்டின் அடிப்படை கட்டமைப்புகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புதிதாக தொழில் தொடங்க வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.
பாரத் நெட் சேவை
இ-சேவை மையங்களில் உள்ள சிரமங்களை போக்கவும், அங்கு பணிபுரியும் ஊழியர்களின் சம்பள பிரச்சினை பற்றியும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 122 இ-சேவை மையங்களும், 13 ஆதார் மையங்களும் உள்ளன. மேலும் கூடுதல் ஆதார் மையங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் அம்மாபேட்டையில் கூட்டுறவு நூற்பாலையில் 30 ஏக்கர் நிலத்தை பெற்று அங்கு தகவல் தொழில்நுட்ப பூங்கா 2-வது அலகு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் பாரத் நெட் சேவை வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நடந்த காரணத்தால் அது முடங்கிப்போய் உள்ளது. அந்த பாரத் நெட் சேவை திட்டத்தை செயல்படுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்துள்ளார். அத்திட்டத்தை ரூ.1,800 கோடியில் செயல்படுத்தினால் மாநிலம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 534 கிராமங்களிலும் பைபர் நெட் மூலம் இணைய வசதி கிடைத்து விடும். இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் இணையதள சேவையில் எவ்வித தடையும் இருக்காது.
சேலம், ஓசூரில்...
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவனத்தில் ஆரம்பத்தில் 76 லட்சம் வாடிக்கையாளர்கள் இருந்தனர். ஆனால் தற்போது 22 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். கடந்த ஆட்சியாளர்கள் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்திற்கு ரூ.400 கோடி அளவுக்கு கடன் சுமையை வைத்துள்ளனர். அதை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். மக்களின் வசதிக்காக தற்போது அரசு கேபிளில் கூடுதலாக 30 சேனல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் சிறப்பான முறையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா செயல்பட்டு வருகிறது. அதேபோல், சேலம், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
முன்னதாக நடந்த ஆய்வு மற்றும் ஆலோசனை கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் நீரஜ் மிட்டல், எல்கார்ட் மேலாண்மை இயக்குனர் அஜய் யாதவ், மேலாளர் குமார், மாவட்ட கலெக்டர் கார்மேகம், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story