இளம்பெண் சரமாரி வெட்டிக் கொலை


இளம்பெண் சரமாரி வெட்டிக் கொலை
x
தினத்தந்தி 22 July 2021 8:27 PM GMT (Updated: 2021-07-23T01:57:03+05:30)

சுரண்டை அருகே இளம்பெண் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சுரண்டை:
சுரண்டை அருகே பட்டப்பகலில் இளம்பெண் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது முதல் கணவரை போலீசார் கைது செய்தனர்.

இளம்பெண்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ளது கல்லூத்து கிராமம். இங்குள்ள வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 30). விவசாய கூலித்தொழிலாளி. இவருக்கும், நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அருணாசலபுரம் கிராமத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் சங்கீதா என்ற மகாலட்சுமி (22) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று காலையில் பொன்ராஜ் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் சங்கீதா மட்டும் தனியாக இருந்தார். 

வெட்டிக் கொலை

அப்போது, அவரது வீட்டின் கதவை ஒருவர் தட்டும் சத்தம் கேட்டது. இதையடுத்து சங்கீதா கதவை திறந்தார். அப்போது, சுமார் 30 வயதுடைய வாலிபர் வீட்டில் நுழைந்தார். அவரை பார்த்து சங்கீதா அதிர்ச்சி அடைந்தார். அவர் சுதாரிப்பதற்குள் அந்த வாலிபர் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் சரமாரியாக அவரை வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் சங்கீதா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அந்த வாலிபர் அங்கிருந்து தனது மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார்.

போலீஸ் விசாரணை

இதற்கிடையே அக்கம்பக்கத்தினர் சங்கீதா வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் கொைல செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக வீரகேரளம்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர் காஜாமுகைதீன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சங்கீதா உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

திடுக்கிடும் தகவல்

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது, பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அம்பை அருகே உள்ள வாகைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் மகன் கண்ணன் (30). கூலித்தொழிலாளியான இவருக்கும், சங்கீதாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணம் ஆன சில மாதங்களிலேயே குடும்ப பிரச்சினை காரணமாக கண்ணனை சங்கீதா பிரிந்து சென்றுவிட்டார். பெரியவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் இருவரும் சமரசம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. 

விவாகரத்து பெறாமல்...

இதற்கிடையே முறையாக விவாகரத்து பெறாமல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கல்லூத்தைச் சேர்ந்த பொன்ராஜை சங்கீதா திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கண்ணன் சங்கீதாவை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதற்காக நேற்று காலையில் ஊரில் இருந்து மோட்டார் சைக்கிளில் கல்லூத்துக்கு கண்ணன் வந்தார். அங்குள்ள சங்கீதா வீடு குறித்து கேட்டறிந்து, அவரது வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார். 
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. எனினும் கொலைக்கு இதுதான் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கைது

இதற்கிடையே மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற கண்ணனை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். 
சுரண்டை அருகே பட்டப்பகலில் இளம்பெண் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்ைப ஏற்படுத்தி உள்ளது.

Next Story