குமரியில் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 4½ லட்சத்தை கடந்தது


குமரியில் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 4½ லட்சத்தை கடந்தது
x
தினத்தந்தி 22 July 2021 8:37 PM GMT (Updated: 2021-07-23T02:07:56+05:30)

குமரி மாவட்டத்தில் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 4½ லட்சத்தை கடந்தது.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 4½ லட்சத்தை கடந்தது. 
தடுப்பூசி முகாம்
குமரி மாவட்டத்தில் கொரோனா பரவலை  தடுக்க கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.  மாவட்டத்துக்கு நேற்று முன்தினம் 13 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. இதைத்தொடர்ந்து நேற்று 65 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.
அதாவது செண்பகராமன்புதூர், அகஸ்தீஸ்வரம் உள்பட 14 இடங்களில் ஆன்லைன் டோக்கன் முறை மூலம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. குழித்துறை அரசு மருத்துவமனை மற்றும் கவிமணி மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வெளிநாடு செல்பவர்களுக்கான 2-வது டோஸ் மட்டும் போடப்பட்டது . இதேபோல பூதப்பாண்டி, செண்பகராமன்புதூர், தடிக்காரன் கோணம், தம்மத்துகோணம் உள்பட மொத்தம் 51 இடங்களில் நேரடி டோக்கன் முறையில் தடுப்பூசி போடப்பட்டது.
கூட்டம் அலைமோதியது
நாகர்கோவில் மாநகராட்சியில் 5 இடங்களில் முகாம் நடந்தது. அதாவது அனைத்து வயதினருக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி சால்வேஷன் ஆர்மி பள்ளி, இந்து கல்லூரி மற்றும் டதி பள்ளி ஆகிய 3 இடங்களில் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு பள்ளிக்கும் 200 டோஸ் வழங்கப்பட்டு இருந்தது. வடசேரி கனகமூலம் சந்தை மற்றும் மீன் மார்க்கெட் வியாபாரிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 
குமரி மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்து தடுப்பூசி முகாம்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. பொதுமக்கள் அதிகாலையிலேயே முகாமுக்கு சென்று நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர். நேற்று மொத்தம் 10,341 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் தடுப்பூசி போட்டவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 53 ஆயிரத்து 748 ஆக உயர்ந்துள்ளது.

Next Story