அதிக பாரம் ஏற்றி சென்ற 11 கனரக வாகனங்கள் பறிமுதல்


அதிக பாரம் ஏற்றி சென்ற 11 கனரக வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 July 2021 2:18 AM IST (Updated: 23 July 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

அதிக பாரம் ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கிய நிலையில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 11 கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

களியக்காவிளை:
அதிக பாரம் ஏற்றி சென்ற லாரி விபத்தில் சிக்கிய நிலையில் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 11 கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 
அபராதம்
குமரி மாவட்டத்தில் இருந்து பாறைகள், எம்சாண்ட் போன்ற கனிமவளங்கள் தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அப்படி ஏற்றி செல்லும் கனரக வாகனங்களில் சில, அனுமதிக்கப்பட்ட எடையை விட கூடுதலாக ஏற்றிச் செல்கின்றன. அதிக எடைகளை ஏற்றி செல்லும் லாரிகளால், தினமும் வாகன விபத்துக்களும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.
நேற்றுகூட அழகியமண்டபம் அருகே கல்லுவிளையில் அதிக எடையுடன் பாறைகளை ஏற்றி சென்ற டாரஸ் லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் மற்றும் கிளீனர் காயமடைந்தனர். 
இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடப்பதால் விதிகளை மீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டங்களும், அரசுக்கு கோரிக்கையும் வைத்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்களை அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்து வருகின்றனர். 
கனரக வாகனங்கள் பறிமுதல்
அந்தவகையில் விளவங்கோடு தாசில்தாா் விஜயலெட்சுமி தலைமையில் துணை தாசில்தார் சுனில்குமார், கூடுதல் வருவாய் ஆய்வாளர்கள் குமார், சிந்துகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் மார்த்தாண்டம், குழித்துறை, படந்தாலுமூடு, களியக்காவிளை பகுதிகளில் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக பாரம் ஏற்றி வந்ததாக 11 கனரக வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குழித்துறை வி.எல்.சி. மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

Next Story