சிராடி மலைப்பாதையில் நிலச்சரிவு; போக்குவரத்துக்கு தடை


சிராடி மலைப்பாதையில் நிலச்சரிவு; போக்குவரத்துக்கு தடை
x
தினத்தந்தி 22 July 2021 9:01 PM GMT (Updated: 22 July 2021 9:01 PM GMT)

தொடர் கனமழை காரணமாக சிராடி மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிராடி மலைப்பாதையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

ஹாசன்: தொடர் கனமழை காரணமாக சிராடி மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சிராடி மலைப்பாதையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. 

சிராடி மலைப்பாதை

பெங்களூரு-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிராடி மலைப்பாதை உள்ளது. ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா மற்றும் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா நெல்லியாடி இடையே இந்த சிராடி மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த சிராடி மலைப்பாதையில் ஆண்டுேதாறும் தென்மேற்கு பருவமழையின்போது நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. 

இந்த நிலையில் தற்போதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, ஹாசன், சிவமொக்கா மற்றும் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 

நிலச்சரிவு

இந்த நிலையில் நேற்று முன்தினம் புத்தூர் மற்றும் சக்லேஷ்புரா இடைப்பட்ட பகுதிகளில் சிராடி மலைப்பாதையில் அமைந்துள்ள மாரனஹள்ளி (தட்சிண கன்னடா), தோனிக்கல்(ஹாசன்) ஆகிய பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இந்த கனமழை காரணமாக பெங்களூரு-மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாரனஹள்ளி, தோனிக்கல் இடைப்பட்ட பகுதியில் சிராடி மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலச்சரிவு காரணமாக அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்ததும் சக்லேஷ்புரா தாசில்தார் ஜெயக்குமார் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டார். சிராடி மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அந்தப்பாதையில் போக்குவரத்தை நிறுத்த முடிவு செய்யப்பட்டது. 

போக்குவரத்துக்கு தடை

சிராடி மலைப்பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதை அறிந்ததும், ஹாசன் மாவட்ட கலெக்டர் ஆர்.கிரீஷ் சிராடி மலைப்பாதையில் போக்குவரத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மங்களூருவில் இருந்து பெங்களூரு நோக்கி வரும் வாகனங்கள் மாரனஹள்ளி சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டன. பெங்களூருவில் இருந்து ஹாசன் வழியாக மங்களூரு செல்லும் வாகனங்கள் தோனிக்கல் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டன. 

இதையடுத்து பெங்களூருவில் இருந்து மங்களூருவுக்கு செல்லும் வாகனங்கள் பேளூர், மூடிகெரே, சார்மடி மலைப்பாதை வழியாகவும், மங்களூருவில் இருந்து பெங்களூரு செல்லும் வாகனங்கள் மடிகேரி வழியாகவும் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. 

கலெக்டர் உத்தரவு

இந்த நிலச்சரிவு காரணமாக, புத்தூர் அருகே குந்தியா பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. அதன்பின்னர் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டதால் போக்குவரத்து சீரடைந்தது.
இந்த நிலையில் சிராடி மலைப்பாதையில் நிலச்சரிவை சரி செய்து, மறுசீரமைப்பு பணிகளை உடனடியாக தொடங்கும்படி பொதுப்பணித்துறையினருக்கு கலெக்டர் ஆர்.கிரீஷ் உத்தரவிட்டுள்ளார்.

Next Story