சிக்கமகளூருவில் 4 நாட்களாக இடைவிடாது கொட்டும் கனமழை
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை இடைவிடாது கொட்டுகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிக்கமகளூரு: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை இடைவிடாது கொட்டுகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4 நாட்களாக தொடர் கனமழை
கர்நாடகத்தில் கடந்த மாதம் (ஜூன்) தென்மேற்கு பருவமழை தொடங்கியது. தொடக்கத்தில் சில நாட்கள் பெய்த மழை, அதன்பிறகு சரியாக பெய்யாமல் போக்கு காட்டி வந்தது. இந்த நிலையில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
குறிப்பாக மலைநாடு மாவட்டம் என்றழைக்கப்படும் சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் 4-வது நாளாக நேற்றும் இடைவிடாது பலத்த மழை கொட்டியது. சிக்கமகளூருவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மண்சரிவு பீதி
சிக்கமகளூரு மாவட்டத்தில் சிக்கமகளூரு, கலசா, மூடிகெரே, தரிகெரே, என்.ஆர்.புரா, கடூர் ஆகிய தாலுகாக்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டுகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டுவதால், மண்சரிவு ஏற்படும் பீதியில் காபி தோட்டங்களுக்கு தொழிலாளிகள் யாரும் வேலைக்கு செல்வதில்லை. இதனால், அறுவடைக்கு தயாராக இருக்கும் காபி கொட்டைகள், பறிக்கப்படாமல் செடிகளிலேயே அழுகி வருகின்றன. இதன்காரணமாக காபி தோட்ட அதிபர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஏராளமான மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்துள்ளன. இதனால் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கி உள்ளன. மேலும் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு
சிக்கமகளூரு மாவட்டத்தில் இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் இங்குள்ள துங்கா, பத்ரா, ஹேமாவதி ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளின் இருகரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக அந்த ஆறுகளின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கலசாவில் இருந்து ஒரநாடு செல்லும் சாலையில் ஹெப்பாலே பகுதியில் பத்ரா ஆற்றின் குறுக்கே உள்ள தரைபாலத்தை தொட்டப்படி தண்ணீர் செல்கிறது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல, கலசா அருகே கல்லுகோடு கிராமத்துக்கு செல்லும் சாலையில் கால்வாயின் குறுக்கே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தரைமட்ட பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கால்வாய் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஆனால் பாலம் அமைக்காததால், அந்தப்பகுதி மக்களே தற்காலிகமாக பாலம் அமைத்திருந்தனர். தற்போது அந்த பாலமும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதால், அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வெளியே வர முடியாத நிலையில் தவிக்கிறார்கள்.
சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
சிக்கமகளூருவுக்கு சுற்றுலா வந்த பயணிகள் சிலர் தொடர் கனமழை காரணமாக பாபாபுடன் கிரி மலைக்கு செல்ல முடியாமல் தாங்கள் தங்கியிருக்கும் அறைகளிலேயே முடங்கி உள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் வெளியே செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story