ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை


ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 22 July 2021 9:14 PM GMT (Updated: 2021-07-23T02:44:13+05:30)

காரமடை பகுதிக்கு தடுப்பூசி ஒதுக்காததை கண்டித்து ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

காரமடை

காரமடை பகுதிக்கு தடுப்பூசி ஒதுக்காததை கண்டித்து ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியிலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா தடுப்பூசி

கோவைக்கு நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது. இதையடுத்து நேற்று புறநகர் பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் காரமடை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட இரும்பறை, சின்னக்கள்ளிப்பட்டி, ஆதிமாதையனூர், கல்லாறு பகுதிகளுக்கு தலா 250 டோஸ்கள் ஒதுக்கப்பட்டது. 

இதேபோல மேட்டுப்பாளையம் நகர்நல மையத்திற்கு 500 டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளையும் மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியது. ஆனால் காரமடை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தடுப்பூசி ஒதுக்கப்படவில்லை. இதனால் அங்கு தடுப்பூசி போட காத்திருந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், காரமடை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தடுப்பூசி ஒதுக்காததை கண்டித்து, ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து காரமடை-கன்னார்பாளையம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அறிந்த காரமடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனுசாமி, காரமடை வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

கால அவகாசம்

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காரமடை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடப்படுவதில்லை. மேலும் தடுப்பூசி எப்போது வரும் என்ற தகவலையும் சரியாக தெரிவிப்பது இல்லை. இதனால் பொதுமக்கள் தேவையில்லாமல் அலைக்கழிக்கப்படும் நிலை உள்ளது. 

கூலி வேலைக்கு செல்பவர்கள் தங்கள் வேலையை விட்டுவிட்டு, தடுப்பூசிக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 2-வது தவணை தடுப்பூசி செலுத்த கால அவகாசம் முடிந்தும், தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியவில்லை. 

இதனால் தொடர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் காரமடை பகுதிக்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 

Next Story