2-வது தவணை கோவேக்சின் தடுப்பூசி போடாமல் திருப்பி அனுப்பப்படும் பொதுமக்கள்


2-வது தவணை கோவேக்சின் தடுப்பூசி போடாமல் திருப்பி அனுப்பப்படும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 23 July 2021 3:24 AM IST (Updated: 23 July 2021 3:24 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் 2-வது தவணை கோவேக்சின் தடுப்பூசி போட முடியாததால், பொதுமக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

பெரம்பலூர்:

9 பேருக்கு கொரோனா
பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 11,410 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். இவர்களில் 11,016 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். மேலும் மாவட்டத்தில் நேற்று அறிவிக்கப்பட்ட பரிசோதனை முடிவின்படி பெரம்பலூர் ஒன்றியத்தில் 3 பேர், வேப்பந்தட்டை ஒன்றியத்தில் 3 பேர், வேப்பூர் ஒன்றியத்தில் 2 பேர், ஆலத்தூர் ஒன்றியத்தில் ஒருவர் என மொத்தம் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.சமீபத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 179 பேரில் 44 பேர் தனிமைப்படுத்தும் முகாம்களிலும், வீடுகளிலும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு 215 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 3 நாட்களாக கொரோனாவுக்கு உயிரிழப்புகள் இல்லை.
திருப்பி அனுப்பப்படுகின்றனர்
மேலும் மாவட்டத்தில் நேற்று வரை ஒரு லட்சத்து 41 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும், 15,173 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியும் என மொத்தம் ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 849 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 2,588 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால், 2-வது தவணை கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்தவர்கள் கடந்த சில நாட்களாகவே திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்திற்கு இன்னும் ஓரிரு நாட்களில் கோவேக்சின் தடுப்பூசி யூனிட்டுகள் அரசால் வழங்கப்படும். அதன்பிறகு கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறையினர், தடுப்பூசி செலுத்த வருபவர்களிடம் கூறி திருப்பி அனுப்பிவிடுகின்றனர். ஆனால் 12,310 யூனிட் கோவிஷீல்டு தடுப்பூசி போதிய கையிருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story