பப்ஜி விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் விஷம் குடித்து தற்கொலை
பப்ஜி விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே உள்ள சிறுநல்லிகோவில் எல்லுக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன். இவருடைய மகன் பிரதீஷ் (வயது 17). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பிரதீஷ் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் பாடங்களை படித்து வந்தார். இதற்கிடையே செல்போனில் பப்ஜி விளையாட்டை பதிவேற்றம் செய்த மாணவர் அதில் அடிக்கடி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.
விசாரணை
ஒரு கட்டத்தில் பப்ஜி விளையாட்டில் அதீத நாட்டம் கொண்ட பிரதீஷ் தொடர்ந்து பப்ஜி விளையாடி வந்தாராம். இதை பார்த்த பெற்றோர் படிப்பில் கவனம் செலுத்துமாறும், பப்ஜி விளையாட வேண்டாம் என்று கண்டித்ததாக தெரிகிறது. பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த பிரதீஷ் வீட்டில் வைத்து விஷம் குடித்தார். பின்னர் சிறிது நேரத்தில் பெற்றோரிடம் தான் விஷத்தை குடித்து விட்டதாக கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக பிரதீசை நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை மாணவர் பிரதீஷ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பப்ஜி விளையாடியதற்கு பெற்றோர் திட்டியதால் பிளஸ்-2 மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து ெகாண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story