வங்கி மேலாளர் போல் பேசி நகை கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்தவர் கைது


வங்கி மேலாளர் போல் பேசி நகை கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்தவர் கைது
x
தினத்தந்தி 23 July 2021 5:31 AM GMT (Updated: 2021-07-23T11:01:14+05:30)

வங்கி மேலாளர் போல் பேசி நகை கடைக்காரரிடம் ரூ.50 ஆயிரம் கொள்ளையடித்தவரை போலீசார் கைது செய்தனர்.

பெரம்பூர்,

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் வினோத் (வயது 38). இவர் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நகை கடை நடத்தி வருகிறார். இவரது செல்போனில் வங்கி மேலாளர் போல் பேசிய மர்மநபர், “வங்கியில் புதிய ரூபாய் நோட்டுகள் வந்துள்ளது. உங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை கொடு்த்து விட்டு புதிய ரூபாய் நோட்டுகளை வாங்கிச் செல்லும்படி” கூறினார்.

அதை நம்பி வினோத், நகை கடையில் இருந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு வங்கிக்குச் சென்றார். வாசலில் அவரை வழிமறித்த மர்மநபர், தன்னை வங்கி மேலாளர் என்று கூறி அவரிடம் இருந்த ரூ.50 ஆயிரத்தை வாங்கிக்கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளுடன் வருவதாக கூறிவிட்டு மாயமானார். பின்னர்தான் வினோத், தன்னை மர்மநபர் நூதன முறையில் ஏமாற்றி ரூ.50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்த புகாரின்பேரில் கொருக்குபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த முரளி (51) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்து வந்து இவரது கூட்டாளிகள் யார்? யார்?. இது போல் வேறு எங்காவது மோசடி செய்து உள்ளாரா? என விசாரித்து வருகின்றனர்.

Next Story