பயணி தவறவிட்ட மணிபர்சை நேர்மையுடன் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் - துணை கமிஷனர் பாராட்டு
பயணி தவறவிட்ட மணிபர்சை நேர்மையுடன் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா பாராட்டினார்.
திரு.வி.க. நகர்,
சென்னை ஓட்டேரி ஸ்டாரன்ஸ் சாலையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 40). ஆட்டோ டிரைவரான இவர், புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் ஊர்காவல் படை வீரராகவும் உள்ளார். நேற்று அதிகாலை பெரம்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து கண்ணதாசன் நகருக்கு ஒரு பயணியை சவாரி ஏற்றிச்சென்றார்.
அவரை இறக்கிவிட்டு திரும்பி வந்தபோது, தனது ஆட்டோவில் பயணி தவறவிட்ட மணிபர்ஸ் இருப்பதை கண்டார். அதில் ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு, ஆதார் கார்டு மற்றும் ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான பணம் இருந்தது. ராதாகிருஷ்ணன், அதனை நேர்மையுடன் புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணாவிடம் ஒப்படைத்தார்.
ஆதார்கார்டில் இருந்த முகவரியை வைத்து அதன் உரிமையாளரான ஜெய்சங்கர் (55) என்பவரை துணை கமிஷனர் நேரில் வரவழைத்து மணிபர்சை அவரிடம் ஒப்படைத்தார். அதை பெற்றுக்கொண்ட அவர், ஆட்டோ டிரைவர் ராதாகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவித்தார். துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணாவும், ஆட்டோ டிரைவரின் நேர்மையை வெகுவாக பாராட்டினார்.
Related Tags :
Next Story