தூத்துக்குடியில் 2893 பேருக்கு போலீஸ் உடற்கூறுதேர்வு திங்கட்கிழமை தொடங்குகிறது


தூத்துக்குடியில் 2893 பேருக்கு போலீஸ் உடற்கூறுதேர்வு திங்கட்கிழமை தொடங்குகிறது
x
தினத்தந்தி 23 July 2021 6:07 PM IST (Updated: 23 July 2021 6:07 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 2 ஆயிரத்து 893 பேருக்கு போலீஸ் பணிக்கான உடற்கூறு தேர்வு திங்கட்கிழமை தொடங்குகிறது.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 2 ஆயிரத்து 893 பேருக்கு போலீஸ் பணிக்கான உடற்கூறு தேர்வு திங்கட்கிழமை தொடங்குகிறது. பங்கேற்போர் கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
போலீஸ் தேர்வு
2020-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த 2-ம் நிலை காவலர் ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம், சிறைக்காவலர், ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி ஆண், விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துதேர்வு கடந்த 13.12.2020 அன்று நடந்தது. இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2-ம் கட்ட தேர்வான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்கூறு தேர்வு நாளைமறுநாள் (திங்கட்கிழமை) முதல் 2.8.21 வரை நடக்கிறது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 3.8.21 முதல் உடற்கூறு திறனாய்வு தேர்வு நடக்கிறது. அதன்படி எழுத்து தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 1662 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 1231 பேரும் தேர்ச்சி அடைந்து உள்ளனர். இவர்களுக்கான உடற்கூறு தேர்வு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.
உடற்கூறு தேர்வு
இதில் வருகிற 26ந் தேதி முதல் 29ந் தேதி வரை தினமும் தலா 500 பேரும், 30ந் தேதி 450 பேரும், 2.8.2021ந் தேதி 443 பேரும், உடற்கூறு தேர்வுக்கு அழைக்கப்பட்டு உள்ளனர். உடற்கூறு தேர்வில் கலந்து கொள்ளவரும் விண்ணப்பதாரர்கள், அவர்களுக்கு அழைப்பு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் தவறாமல் தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அழைப்புக் கடிதத்துடன் ஆஜராக வேண்டும்.
மேலும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்த நுழைவுசீட்டில் புகைப்படம் இல்லாத விண்ணப்பதாரர் புகைப்படத்தை ஒட்டி புகைப்படத்தின் மீது அரசிதழ் பதிவுபெற்ற அலுவலரின் சான்றொப்பம் பெற்று வரவேண்டும். மேலும் அடையாள அட்டை , அதாவது ஆதார் கார்டு அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை, உடற்கூறு தேர்வுக்கு வரும் போது கொண்டு வரவேண்டும்.
கொரோனா சான்றிதழ்
விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு வரும் போது, 4 நாட்களுக்குள் பெறப்பட்ட கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்டும். அந்த சான்று இருந்தால் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். விண்ணப்பதாரர்கள் மைதானத்துக்குள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். மைதானத்துக்குள் செல்போன் கொண்டுவர அனுமதியில்லை. தேர்வு விண்ணப்பத்தில் சமர்ப்பித்துள்ள அசல் சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும். மேலும் உடற்கூறு தேர்வு அழைப்பு கடிதத்தில் உள்ள அறிவுரைகளை படித்து பின்பற்றுமாறும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. தேர்வுக்கு வருவோர் எவ்வித வாசகமும், அடையாள அச்சும் இல்லாத மற்றும் பல வண்ணங்கள் இல்லாத சாதாரண மேல்சட்டை மற்றும் கால்சட்டை அணிந்து வர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story