திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தோழியுடன் மாயம்


திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் தோழியுடன் மாயம்
x
தினத்தந்தி 23 July 2021 12:56 PM GMT (Updated: 2021-07-23T18:26:01+05:30)

திருமணமான 3 மாதத்தில் புதுப்பெண் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் தனது தோழியுடன் திடீரென மாயமானார்.

ஜோலார்பேட்டை

ஒரே அறையில் தங்கி வேலை பார்த்த தோழிகள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி கிராமம் நடுவூர் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ் (வயது 23), கார் டிரைவர். சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். இவருக்கும், திருப்பூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்த உறவினர் ஷோபா (20) என்பவருக்கும் கடந்த 3 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. திருப்பூரில் பார்த்து வந்த வேலையை உதறி விட்டு ஷோபா ஆம்பூருக்கு வந்து கணவருடன் குடும்பம் நடத்தி வந்தார். 

ஷோபா திருப்பூரில் வேலை பார்த்த பனியன் நிறுவனத்தில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீராவ் என்பவர் வேலை பார்த்து வந்தார். இருவரும் தோழிகளாக பழகினர். அங்கு ஒரே அறையில் அவர்கள் தங்கியிருந்தனர். திருமணமான தோழியை பார்க்க ஜெயஸ்ரீராவ் ஆம்பூருக்கு வந்தார். அவர், அங்கு ஒரு வாரம் தங்கியிருந்தார்.

குடிநீர் வாங்க சென்ற கணவர்

பின்னர் ஜெயஸ்ரீராவ் தனது சொந்த ஊருக்குப் புறப்பட தயாரானார். அதற்காக ஷோபா, கணவர் காமராஜ் ஆகியோர் சேர்ந்து ஜெயஸ்ரீராவை ரெயிலில் ஏற்றி வழியனுப்ப ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கு வந்தனர். ஜோலார்பேட்டை வழியாக கொல்கத்தா நோக்கி செல்லும் ரெயிலில் ஜெயஸ்ரீராவை ஏற்றி இருக்கையில் அமர வைத்தனர். 

அப்போது அவருடன், ஷோபா பேசி கொண்டிருந்தார். ரெயில் புறப்படும் சற்று நேரத்தில் ஜெயஸ்ரீராவுக்கு குடிநீர் பாட்டில் வாங்கி வரச் சொல்லி ஷோபா, காமராஜை கடைக்கு அனுப்பி வைத்தார். காமராஜ் ரெயில் நிலையத்தில் உள்ள ஒரு கடையில் குடிநீர் பாட்டில் வாங்கச் சென்றார். அந்த நேரத்தில் ரெயில் புறப்பட்டது.

போன் சுவிட் ஆப்

காமராஜ் ஓடி வந்து பார்த்தபோது ஷோபாவை காணவில்லை. அவர், ரெயிலில் இருந்து கீழே இறங்கினாரா, இல்லையா, கீழே இறங்கி காமராஜிக்கு தெரியாமல் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேறி எங்கேனும் சென்று விட்டாரா, இல்லையேல் மேற்கு வங்க மாநில தோழியோடு ரெயிலில் சென்று விட்டாரா? என்ற விவரம் தெரியவில்லை. காமராஜ் தனது மனைவியை தேடிப்பார்த்தும் காணவில்லை. 

காமராஜ், ஜெயஸ்ரீராவ் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாக தகவல் வந்தது. அதிர்ச்சி அடைந்த காமராஜ் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திடீரென மாயமான ஷோபாவை தேடி வருகின்றனர். 

தனிப்படை விரைவு

ஜெயஸ்ரீராவ் வீட்டு முகவரிைய திருப்பூர் தனியார் பனியன் நிறுவனத்தில் இருந்து வாங்கி ஷோபாவை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் கொல்கத்தா விரைந்துள்ளனர். திருமணமான 3 மாதத்தில் மனைவி அவருடைய தோழியுடன் மாயமான சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story