குரும்பூர் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி


குரும்பூர் அருகே தாமிரபரணி ஆற்றில் மூழ்கி புதுமாப்பிள்ளை பலி
x
தினத்தந்தி 23 July 2021 6:26 PM IST (Updated: 23 July 2021 6:26 PM IST)
t-max-icont-min-icon

குரும்பூர் அருகே குடும்பத்தினர் முன்னிலையில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி புது மாப்பிள்ளை பரிதாபமாக பலியானார்.

தென்திருப்பேரை:
குரும்பூர் அருகே குடும்பத்தினர் முன்னிலையில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி புது மாப்பிள்ளை பரிதாபமாக பலியானார்.
பொறியியல் பட்டதாரி
காயல்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது ரபிக். இவரது மகன் முகமது முபாரிஸ் (வயது 27). பொறியியல் பட்டதாரியான இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், சேதுக்குவாய்த்தானை சார்ந்த பெண்ணுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.
நேற்று முன்தினம் பக்ரீத் திருநாளையொட்டி முகமது முபாரிஸ் அவரது மனைவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மனைவி, மாமனார், மாமியார், அப்பா, அம்மா, தம்பி, தங்கை மற்றும் குடும்பத்துடன் சேதுக்குவாய்த்தான் பஞ்சாயத்து பின்புறமுள்ள தாமிரபரணி ஆற்றில் அவர் குளித்துள்ளார். இவர் குளித்துக் கொண்டே ஆழமான பகுதிக்கு சென்று உள்ளார். இவருக்கு நீச்சல் தெரியாது என்பதால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து உயிருக்கு போராடியுள்ளார்.
சாவு
உடனடியாக அவரை குடும்பத்தினரும், அருகில் இருந்தவர்களும் மீட்டு ஆத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால் முகமது முபாரிஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவல் அறிந்த குரும்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து குரும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றார்.
புதுமாப்பிள்ளை ஆற்றில் மூழ்கி பலியான சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.


Next Story