தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு
ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது என்று விவசாயிகள், செய்தித்துறை அமைச்சர் மற்றும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மேலும் பொள்ளாச்சியில் தொடர்போராட்டம்
திருப்பூர்
ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லக்கூடாது என்று விவசாயிகள், செய்தித்துறை அமைச்சர் மற்றும் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மேலும் பொள்ளாச்சியில் தொடர்போராட்டம் நடத்தவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
விவசாயிகள் மனு
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையிலான விவசாயிகள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்க வந்தனர். அப்போது அங்கு வந்த செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் சு.வினீத்திடம் அவர்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது
ஆழியார் அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்துக்கு ரூ.650 கோடி மதிப்பில் கூட்டு குடிநீர் திட்டம், செயல்படுத்த அரசு தயாராகி வருவதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தெரிவித்திருந்தார். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் பி.ஏ.பி. மூலம் சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இதேபோல் மறைமுகமாக 75 சதவீத அளவுக்கு விவசாய பூமிகளுக்கும் கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் தான் ஊர் பொதுமக்களுக்கு குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது.
மேற்கண்ட அமைச்சரின் அறிவிப்பு பி.ஏ.பி. பாசன விவசாயிகளுக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இப்போதுள்ள நிலையில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் ஒரு சுற்று தண்ணீர் கிடைக்கிறது. இந்த குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டால் திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி விவசாயம் அழிந்துவிடும்.
உள்ளிருப்பு போராட்டம்
திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள் பாசனத்துக்காக ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை செயல்படுத்த பல ஆண்டுகளாக போராடி வருகிறது. இந்த திட்டத்துக்கு கேரள அரசாங்கம் போதிய ஒத்துழைப்பு வழங்காமலும், பேச்சுவார்த்தைக்கு வராமல் இழுத்தடித்து வருகிறது. பி.ஏ.பி. பாசனத் திட்டம் தொடங்கப்பட்டு, தண்ணீருக்காக காத்திருக்கும் நிலையில், ஆழியாறு அணையில் இருந்து 120 கி.மீ. தூரம் உள்ள ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் எடுத்துச்செல்ல முயற்சிப்பதை விவசாயிகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
ஒட்டன்சத்திரம் பகுதியில் ஏற்கனவே காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி திண்டுக்கல் மாவட்டத்தில் வரதமாநதி, பொருந்தலாறு, பரப்பலாறு போன்ற நீர்த்தேக்கங்கள் உள்ளன. அதிலிருந்து குடிநீர் தேவைக்கு தண்ணீர் எடுக்கலாம். ஏற்கனவே நடைமுறையில் உள்ள காவிரி குடிநீர்திட்டத்தை விரிவுபடுத்தலாம். அதைவிடுத்து தண்ணீருக்காக போராடிக்கொண்டிருக்கும் பி.ஏ.பி. பாசன திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த நினைப்பதை கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். பி.ஏ.பி. விவசாயிகளை பாதிக்கும் வகையில் ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் திட்டம் செயல்படுத்துவதைக் கண்டித்து, கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகள் இணைந்து, பொள்ளாச்சி பி.ஏ.பி. அலுவலகத்தில் வரும் வாரத்தில் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
---------
----
Related Tags :
Next Story