கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்
அவமானம் தாங்க முடியாததால் தாயாரின் கள்ளக்காதலனை அடித்துக்கொன்று உடலை எரித்தோம் என்று திருப்பூரில் கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
வீரபாண்டி
அவமானம் தாங்க முடியாததால் தாயாரின் கள்ளக்காதலனை அடித்துக்கொன்று உடலை எரித்தோம் என்று திருப்பூரில் கைதான வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
தொழிலாளி கொலை
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் வயது 37. இவர் திருப்பூர் காலேஜ்ரோட்டில் ஒரு வாடகை வீட்டில் தங்கி பிரிண்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த பிரிண்டிங் நிறுவனத்தில் கல்லாங்காடு திருக்குமரன் நகரை சேர்ந்த முருகேஸ்வரி 50 என்பவரும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சந்தோஷ்குமாரை மர்ம ஆசாமிகள் கொலை செய்து அவருடைய உடலை அங்குள்ள பாறை குழியில் போட்டு எரித்து இருப்பது தெரியவந்தது.
இந்த கொலை தொடர்பாக வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் சந்தோஷ்குமாரை கொலை செய்து எரித்துக்கொன்றதாக முருகேஸ்வரி, அவருடைய மகன் ஆரோக்கியதாஸ் 25, ஆரோக்கியதாசின் நண்பர் பாலசுப்பிரமணியம் 26 ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் ஆரோக்கியதாஸ் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு
தாயுடன் உல்லாசம்
நானும் எனது தாய் முருகேஸ்வரியும் கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூர் கல்லாங்காடு திருக்குமரன் நகரில் வசித்து வருகிறோம். கடந்த சில வருடங்களுக்கு முன் எனது தந்தை குடும்ப பிரச்சினையால் எங்களை விட்டுப்பிரிந்து சென்று விட்டார். இதனால் குடும்பத்தில் கஷ்டங்கள் அதிகரித்தது. இதனை தொடர்ந்து எனது தாய், சந்தோஷ் குமார் வேலை பார்த்த பிரிண்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
கடன் தொல்லையால் எனது தாயார் சந்தோஷ்குமாரிடம் ரூ.80 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். இதனைப் பயன்படுத்தி சந்தோஷ்குமார் அவ்வப்போது எங்களது வீட்டுக்கு வந்து சென்றார். அப்போது பணம் தர முடியாத சூழ்நிலையை பயன்படுத்தியும், எனது தாயிடம் ஆசை வார்த்தைகளைக் கூறியும், அவ்வப்போது சந்தோஷ்குமார் எனது தாயுடன் உல்லாசமாக இருந்து வந்தார். இதனை அறிந்து கொண்ட நான் பலமுறை எனது தாயையும், சந்தோஷ்குமாரையும் கண்டித்தேன். ஆனால் தொடர்ந்து சந்தோஷ்குமார் பணம் கேட்டு வருவது போல் வந்து மிரட்டி அப்போது எனது தாயாருடன் உல்லாசமாக இருந்து வந்தார்.
உடலை எரித்தோம்
இதனால் எனது தாயின் கள்ளக்காதலனை கொலை செய்ய திட்டம் தீட்டினேன். அதற்கான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். சம்பவத்தன்று எங்களது வீட்டிற்கு வந்த சந்தோஷ்குமார் எனது தாயாரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ததோடு, கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினார். இது குறித்து எனது தாயார் என்னிடம் கூறினார். இதனால் அவமானம் தாங்கமுடியாமல் நானும் என்னுடைய நண்பர் பாலசுப்பிரமணியனும் இணைந்து சந்தோஷ்குமாரை எங்களது வீட்டிற்கு வரவழைத்தோம். எங்கள் வீட்டிற்கு சந்தோஷ்குமார் வந்தவுடன் இரும்பு ராடை எடுத்து அவரை அடித்து கொலை செய்தோம்.
பின்பு அதிகாலை 2 மணியளவில் சந்தோஷ் குமாரின் உடலை எடுத்துச் சென்று பாறைக்குழியில் போட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு மண்ணைப் போட்டு மூடினோம். பின்னர் வீ்ட்டிற்கு வந்து வீட்டில் படிந்திருந்த ரத்தக் கறையை சுத்தப்படுத்தி விட்டு அங்கிருந்து வேறு இடத்திற்கு சென்று விட்டோம். பின்பு போலீசார் நடத்திய விசாரணையால் மாட்டிக்கொண்டோம்.
இவ்வாறு வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
---
Related Tags :
Next Story