அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 23 July 2021 9:18 PM IST (Updated: 23 July 2021 9:18 PM IST)
t-max-icont-min-icon

அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

கோவை

ஆடி மாத வெள்ளிக்கிழமையைொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு  தரிசனம் செய்தனர்.

ஆடி வெள்ளி

ஆடி மாதத்தின் முதல் நாள் கடந்த 17-ந் தேதி சனிக்கிழமை பிறந்தது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் இந்த மாதம் முழுவதும் பல அவதாரங்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடத்தப்படும்.

கோவை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று முதல் ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி பூஜைகள் சிறப்பாக நடந்தன. 

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு முக்கிய நிகழ்வு என்பதால் பக்தர்கள் அம்மன் கோவில்களுக்கு நேற்று அதிகாலை முதலே வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.

ஊஞ்சல் உற்சவம்

கோவையில் கோனியம்மன், தண்டுமாரியம்மன், கணபதி சூலக்கல் மாரியம்மன் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் நேற்று ஆடி வெள்ளி சிறப்பு பூஜைகள் நடந்தது.

கோனியம்மன் கோவில் வாசல் மற்றும் பிரகாரங்களில் வாழைத் தோரணங்கள் கட்டப்பட்டு காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது.  பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 


முன்னதாக கோவிலுக்குள் நுழையும் முன் தானியங்கி எந்திரம் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு கிருமிநாசினி வழங்கப்பட்டது. அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

வழிகாட்டு நெறிமுறைகள்

கோனியம்மன் கோவிலில் நேற்று 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர். இதனால் பக்தர்கள் திருச்சி சாலை வரை நின்றனர்.  அங்கு பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டனர். பக்தர்களுக்கு ஒலிபெருக்கி மூலம் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் அறிவுறுத் தப்பட்டது. மாலை 6.30 மணி அளவில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

கோவை பெரியகடை வீதியில் மாகாளியம்மன் கோவிலில் அம்மன் மலர் அலங்காரத்திலும், தியாகி குமரன் மார்க்கெட்டில் பிளேக் மாரியம்மன் கோவிலில் கஜாம்பிகை அலங்காரத்திலும், 

கெம்பட்டி காலனி வனபத்ரகாளியம்மன் கோவிலில் அம்மன் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வது உள்ளிட்ட அலங்காரங்களில் காட்சி அளித்தனர்.

சரவணம்பட்டி, கருமத்தம்பட்டி

சரவணம்பட்டி அம்மன் நகரில் உள்ள பத்ரகாளியம்மன் ஆடி ஊஞ்சல் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அம்மனுக்கு 16 வகை திரவிய அபிஷேகங்களும், பராசக்தி போன்று அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. 

தொடர்ந்து அம்மனை ஊஞ்சலில் எழுந்தருள செய்து சிறப்பு பூஜை, மகாதீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு மாங்கல்ய பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல கோட்டை பாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.

ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி சூலூரில் பழமை வாய்ந்த அத்தனூர் அங்காளம்மன், காட்டூர் மாகாளியம்மன், மேற்கு மாகாளியம்மன், பெரியமாரியம்மன், குடலுறவி மாரியம்மன், 

அங்காளம்மன் மற்றும் சோமனூர் பகுதிகளில் உள்ள ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன், கருமத்தம்பட்டி மாரியம்மன், மாகாளியம்மன், எம்.ராயர்பாளையம் மாரியம்மன் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

மேட்டுப்பாளையம்

மேட்டுப்பாளையம் பாக்குக்காரத்தெருவில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியையொட்டி மாகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றது. பின்னர் மாகாளியம்மன் மீனாட்சி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

இதுபோல்  வனபத்ரகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தன. அம்மன் மஞ்சள் காப்பு அணிந்து லட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story