நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை சாலையில் மரங்கள் விழுந்தன மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு


நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை சாலையில் மரங்கள் விழுந்தன மண்சரிவால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 23 July 2021 10:22 PM IST (Updated: 23 July 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக சாலையில் மரங்கள் விழுந்தன. மண்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் காட்டாற்று வெள்ளத்தால் வாழைகள் நாசமானது.

கூடலூர்

நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக சாலையில் மரங்கள் விழுந்தன. மண்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் காட்டாற்று வெள்ளத்தால் வாழைகள் நாசமானது. 

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக கூடலூர், நடுவட்டம் பகுதியில் பாண்டியாறு, மாயாறு, சுண்ணாம்பு பாலம் ஆறு, பொன்னானி, சோலாடி உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் கூடலூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் பொன்னூர் என்ற இடத்தில் சாலையோரம் மண்சரிவு ஏற்பட்டது.

 தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கும் அபாயம் உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மண்சரிவு 

இதனால் அப்பகுதியில் வாகன விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க தேவாலா போலீசார் இரும்பு தடுப்புகளை அடுக்கி வைத்துள்ளனர். இதேபோல் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ் சாலையில் அனுமாபுரம் என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்த தேசியநெடுஞ்சாலைதுறையினர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் விரைந்து வந்து மண் குவியலை அகற்றினர்.

 இதனிடையே ஆற்று வாய்க்காலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதே பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. 

வாழைகளை தண்ணீர் சூழ்ந்தது 

முன்னதாக கூடலூர் சளிவயல் பகுதியில் வாய்க்காலில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியதால் அதன் கரையோரம் பயிரிட்டு இருந்த வாழைகளை தண்ணீர் சூழ்ந்தது. 

பின்னர் மழை நின்றவுடன் சிறிது நேரத்தில் தண்ணீர் வழிந்தோடியது. இதேபோல் ஓவேலி, நடுவட்டம், மசினகுடி பகுதியில் பலத்த மழையால் விவசாய பயிர்கள் பாதிக்கப் பட்டு உள்ளது.

முன்னதாக கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட புத்தூர்வயல் தேன் வயல் ஆதிவாசி கிராமத்தில் வெள்ளப்பாதிப்பு ஏற்படும் அபாயம் இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 ஆதிவாசி குடும்பங்களை வெளியேற்றி, புத்தூர்வயல் அரசு பள்ளிக்கூடங்களில் தங்க வைத்தனர். 

மரங்கள் விழுந்தன

ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் ஊட்டி-கோத்தகிரி சாலை தொட்டபெட்டாவில் மரம் முறிந்து விழுந்தது. இதனை ஊட்டி தீயணைப்பு வீரர்கள் வெட்டி அகற்றினர்.

 அதுபோன்று ஊட்டி-மஞ்சூர் சாலை குந்தா பாலம் பகுதியில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் அரசு பஸ் உள்பட வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

தொடர்ந்து நெடுஞ்சாலை துறையினர் மரம் அறுக்கும் எந்திரம் மூலம் மரத்தை துண்டு, துண்டாக வெட்டி அப்புறப்படுத்தினர். 2 மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து சீரானது. 

போக்குவரத்து பாதிப்பு 

ஊட்டி-எடக்காடு சாலை, மஞ்சூர் தொட்டகம்பை பகுதியில் 2 மரங்கள் முறிந்து விழுந்தது. ஊட்டி-இத்தலார் சாலை முத்தோரை உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. 

சாலையில் மண் கிடந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை பொக்லைன் எந்திரம் மூலம் மண் அகற்றி சரிசெய்யப்பட்டது.

பலத்த மழையால் 89 அடி கொள்ளளவு கொண்ட குந்தா அணை நிரம்பியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அதுபோன்று பிற அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகின்றது. 

மழையளவு 

நீலகிரி மாவட்டத்தில்  மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- 

ஊட்டி-53.9, நடுவட்டம்-137, கல்லட்டி-21.3, கிளன் மார்கன்-116, குந்தா-62, அவலாஞ்சி-156, எமரால்டு-93, அப்பர் பவானி-132, பாலகொலா-72, குன்னூர்-34.5, கேத்தி-47, உலிக்கல்-34, எடப் பள்ளி-21, கூடலூர்-85, தேவாலா-103.

 செருமுள்ளி-40, பாடாந் தொரை-41, ஓவேலி-64, பந்தலூர்-150.2, சேரங்கோடு-56 என மொத்தம் 1669.9 மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரி 58.62 ஆகும். அதிகபட்சமாக அவலாஞ்சி, பந்தலூரில் 15 சென்டி மீட்டர் மழை கொட்டியது.


Next Story