வேலூர் மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி விழா


வேலூர் மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி விழா
x
தினத்தந்தி 23 July 2021 10:25 PM IST (Updated: 23 July 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

வேலூர்

ஆடி வெள்ளி

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கல் வைத்தல், சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், அலங்காரமும் நடந்தது.

 கொரோனா பரவல் காரணமாக கோவில்களில் பல்வேறு முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மக்கள் அதிகம் கூடுவதை தடுக்க முக்கிய கோவில்களில் போலீசார் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

ரத்தினகிரி கோவில்

ரத்தினகிரியில் உள்ள பாலமுருகன் கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றது. பாலமுருகனுக்கு வண்ண மலர்களால் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேலூர் பாலாற்றங்கரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஜலகண்டேஸ்வரர் கோவில், சலவன்பேட்டை ஆனைகுளத்தம்மன் கோவில், வேலூர் காட்பாடி சாலையில் உள்ள விஷ்ணுதுர்க்கையம்மன் கோவில், சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் உள்ள பூங்காவனத்தம்மன் கோவில், தோட்டப்பாளையத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில், சைதாப்பேட்டை மலையடிவாரத்தில் உள்ள தேவி கருமாரியம்மன், மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள கருமாரியம்மன் மற்றும் வேலூரில் உள்ள வேம்புலியம்மன், சோளாபுரி அம்மன் உள்பட அனைத்து அம்மன் கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

குடியாத்தம்

குடியாத்தம் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோவிலிலும், பிச்சனூர் காளியம்மன்பட்டி காளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளி முன்னிட்டு மூலவர் வெள்ளிக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும்  கோவில் வளாகத்தில் கோபாலபுரம் இளம் நட்சத்திரங்கள் மற்றும் ஆடி பவுர்ணமி விழா குழுவின் சார்பில் சந்தனத்தால் உருவாக்கப்பட்ட பாலாம்பிகை அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கொரோனா தொற்று காலத்திற்குப்பின் கோவில்கள் திறக்கப்பட்டதால் காலை முதலே பக்தர்கள் தரிசனம் செய்ய கோவில்களில் திரண்டனர். கோவில்களில் முககவசம் அணிந்த பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர் மேலும் சமூக இடைவெளி பின்பற்றி கோவிலில் பக்தர்கள் வழிபட்டனர். 

வெட்டுவாணம்

வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் ஆடிவெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் சாமிதரிசனம் செய்வதற்கு காலையில் இருந்து கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். முககவசம் அணிந்து வந்தவர்களூக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. கோவில் வளாகத்திலும், கோவிலுக்குச் செல்லும் சாலையிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 
மதியம் 2 மணிக்கு மேல் கோவிலுக்கு செல்லும் பாதையில் போலீசார் பேரிகார்டுகள் அமைத்து பக்தர்களை கட்டுப்படுத்தினர். 


Next Story