சீர்காழி தாலுகா மீனவ கிராமங்களில் கடலோர அமலாக்கப்பிரிவு-மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு


சீர்காழி தாலுகா மீனவ கிராமங்களில் கடலோர அமலாக்கப்பிரிவு-மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 23 July 2021 5:00 PM GMT (Updated: 2021-07-23T22:30:17+05:30)

சீர்காழி தாலுகா மீனவ கிராமங்களில் கடலோர அமலாக்க பிரிவு - மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.

திருவெண்காடு,

மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் சுருக்குமடி அனுமதியை மறுக்கும் பட்சத்தில் 1983-ல் இயற்றப்பட்ட 21 வகையான சட்டங்களை அமல்படுத்தக்கோரி மடவாமேடு, திருமுல்லைவாசல், பூம்புகார் மற்றும் சந்திரபாடி ஆகிய கிராம மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதன் உச்ச கட்டமாக தங்களுடைய ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, குடியுரிமை அட்டைகளை அரசிடம் ஒப்படைத்தனர். போராட்டம் தீவிரமாக வலுக்கவே மாவட்ட கலெக்டர் லலிதா தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

இதில் 1983-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நேற்று கடலோர அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் வெர்ஜினியா, பூம்புகார் கடற்கரை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், போலீஸ் ஏட்டுகள் கணேஷ், எழிலன், பாலமுருகன், பூம்புகார் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல், அமலாக்கப் பிரிவினர், மீன்வளத்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலையிலேயே விசை படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துகிறார்களா? என ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மதியம் புதுக்குப்பம், நாயக்கர் குப்பம், மடத்து குப்பம், சாவடி குப்பம், கீழ மூவர்கரை, மேல மூவர்கரை உள்ள கடற்கரை கிராமங்களில் தடைசெய்யப்பட்ட வலைகளை மீனவர்கள் பயன் படுத்துகிறார்களா? என துருவித்துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ள மீனவ கிராமங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வங்கக்கடலில் சூறாவளி காற்று வீசுவதால் நேற்று மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

Next Story