பொலிவிழந்த சோழர் கால ‘நாகை துறைமுகம்’ கடல் மார்க்கத்தில் மீண்டும் ஆதிக்கம் செலுத்துமா?


பொலிவிழந்த சோழர் கால ‘நாகை துறைமுகம்’ கடல் மார்க்கத்தில் மீண்டும் ஆதிக்கம் செலுத்துமா?
x
தினத்தந்தி 23 July 2021 5:16 PM GMT (Updated: 2021-07-23T22:46:09+05:30)

சரக்கு-பயணிகள் கப்பல் போக்குவரத்து இல்லாமல் சோழர் கால துறைமுகமான நாகை துறைமுகம் பொலிவிழந்து காணப்படுகிறது. கடல் மார்க்கத்தில் நாகை துறைமுகம் மீண்டும் ஆதிக்கம் செலுத்துமா? என பொதுமக்கள் எதிர்பார்க்க தொடங்கி உள்ளனர்.

நாகப்பட்டினம்,

சோழர்களின் ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவின் முக்கிய துறைமுக நகரமாக நாகை விளங்கியது. நாகை துறைமுகத்தில் பன்னாட்டு சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது.

தென் இந்தியாவின் கடல்வழி போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான நாகையில் இருந்து கைவினை பொருட்கள், வாசனை திரவியங்கள், வெங்காயம், மிளகாய், சிமெண்டு உள்ளிட்டவை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. தென் இந்திய பகுதிகளுக்கு தேவைப்படும் பொருட்களை இறக்குமதி செய்யும் துறைமுகமாகவும் நாகை துறைமுகம் இருந்தது.

மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து பாமாயில், ஆடை, ஆபரணங்கள் நாகையில் இறக்குமதி செய்யப்பட்டு, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டன. ஏற்றுமதி, இறக்குமதி என கடல் மார்க்கத்தில் நாகை துறைமுகம் ஆதிக்கம் செலுத்தி வந்தது. பல்வேறு பகுதிகளை சேர்ந்த வணிகர்கள் நாகை வந்து சென்றனர்.

சரக்கு போக்குவரத்து மட்டுமின்றி நாகையில் இருந்து பயணிகள் கப்பலும் இயக்கப்பட்டன. நாகையில் இருந்து சிங்கப்பூா், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு மக்கள் பயணம் செய்த காலம் நாகையின் பொற்காலமாக இன்றளவும் கருதப்படுகிறது.

கடல்வழி சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தில் கொடி கட்டி பறந்த நாகை துறைமுகம் 1980-களுக்கு பின்னர் தனது ‘வணிக’ பொலிவை படிப்படியாக இழந்தது. எம்.வி. சிதம்பரம் கப்பல் மட்டும் நாகை துறைமுகத்துக்கு, துறைமுக அந்தஸ்தை வழங்கி கொண்டிருந்தது. 1984-ம் ஆண்டில் மலேசியாவில் இருந்து தமிழகத்துக்கு வந்து கொண்டிருந்த அந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து எம்.வி. சிதம்பரம் கப்பலும் தனது நாகை சேவையை நிறுத்தி கொண்டது.

காலப்போக்கில் அண்டை நாடுகளில் உள்ள துறைமுகங்கள் கண்டெய்னர்களை கையாளும் நவீன வசதியுடன் மேம்படுத்தப்பட்டன. நாகையில் அதற்கேற்ப கண்டெய்னர் கையாளும் வசதி அப்போது இல்லாத காரணத்தால் வெங்காய ஏற்றுமதியிலும் நாகை துறைமுகம் பின்னடைவை சந்தித்தது.

நாகை துறைமுகம் போதுமான வளர்ச்சி அடையாமல் இருந்ததால் ஏற்றுமதி, இறக்குமதியில் தொடர்ந்து சுணக்கம் ஏற்பட்டு வந்தது. போதுமான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத நிலையில், தற்போது இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதியாகும் பாமாயில் மட்டுமே நாகை துறைமுகத்தை இயங்க செய்து வருகிறது.

நாகை துறைமுகம், அனைத்து பருவநிலைகளிலும் இயங்கக்கூடிய பசுமை சூழ் கப்பலணை துறைமுகமாக மேம்படுத்தப்படும் என கடந்த ஆட்சி காலத்தில் அறிவிப்புகள் வந்தது, நாகை மக்களிடையே வரவேற்பை பெற்றது. ஆனால் அவை அறிவிப்புகளாக மட்டுமே இருக்கின்றன. செயல் வடிவம் பெறவில்லை.

இதனால் நாகை துறைமுகத்தில் இருந்து பழைய காலம் போல கப்பல் போக்குவரத்து நடப்பது என்பது கானல் நீராக மாறிவிட்டதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நாகையில் கப்பல் போக்குவரத்தை தொடங்கினால்தான் மாவட்டம் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடையும் எனவும் பொதுமக்கள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து நாகை துறைமுக அபிவிருத்தி குழு தலைவர் சந்திரசேகரன் கூறியதாவது:-

நாகையின் சிறப்பை உலகறிய செய்ததில் கப்பல் போக்குவரத்துக்கு முக்கிய இடம் உண்டு. சோழர் காலத்தில் இருந்தே கொடிகட்டி பறந்த நாகை துறைமுகம், நவீன காலத்துக்கேற்ப அடிப்படை வசதிகள் இல்லாததால் தற்போது செயலிழந்து விட்டது. பழமையான நாகை துறைமுகத்தை, சர்வதேச தரத்துடன் பசுமை சூழல் துறைமுகமாக தரம் உயர்த்தி கப்பல் போக்குவரத்தை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல் கட்டமாக மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி வரும் கடுவையாறை நேராக கடலில் கலக்க செய்தால், நாகை துறைமுகத்தில் ஏற்றுமதிக்கான மிதவை படகுகள் எந்த இடையூறுமின்றி வந்து செல்ல முடியும். தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடலை 5 மீட்டர் ஆழப்படுத்தினாலே 1,000 டன் முதல் 2 ஆயிரம் டன் எடை கொண்ட சிறிய கப்பல்கள் முகத்துவாரம் வரை வந்து செல்ல முடியும்.

பயணிகள் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்தை சென்னை-நாகை இடையிலும், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் மீண்டும் தொடங்கலாம். சிமெண்டு போன்றவற்றை இலங்கைக்கு ஏற்றுமதி செய்யவும் வாய்ப்பு உருவாகும். சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலூர், நாகை மற்றும் காரைக்கால் இடையே 5 மாதத்துக்குள் ரோரோ, ரோபேக்ஸ் கப்பல்கள் இயக்குவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது வெறும் அறிவிப்பாக மட்டும் இல்லாமல் விரைவில் நடைமுறைப்படுத்தி நாகையில் கப்பல் போக்குவரத்தை தொடங்க வேண்டும்.

தற்போது சி.பி.சி.எல். விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடியும் பட்சத்தில் நாகை துறைமுகம் கட்டுப்பாட்டில் உள்ள நாகூர் ஆயில் ஜெட்டியை விரிவாக்கம் செய்தால், இங்கிருந்து கச்சா எண்ணெய்யை சி.பி.சி.எல். நிறுவனத்துக்கு சுலபமாக கொண்டு செல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

சரக்கு மற்றும் பயணிகள் கப்பல் போக்குவரத்து இல்லாமல் பொலிவிழந்து காணப்படும் நாகை துறைமுகம் மீண்டும் கடல் மார்க்கத்தில் தனது ஆதிக்கத்தை செலுத்துமா? என்பதற்கு காலம் தான் பதில் கூற வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

நாகை துறைமுக மேம்பாடு குறித்து துறைமுக அதிகாரி ஒருவர் கூறும்போது, நாகை துறைமுகம் நகரின் மையப்பகுதியில் இருக்கிறது. சரக்குகளை கையாள தேவையான நிலப்பரப்பு இல்லாததாலும், குறைவான தொழிற்சாலைகளே இருப்பதாலும், நாகைக்கு அருகே உள்ள காரைக்காலில் தனியார் துறைமுகம் இருப்பதாலும், நாகை துறைமுகத்தை மேம்படுத்த வாய்ப்புகள் குறைவாக உள்ளது. தற்போது பாமாயில் இறக்குமதி செய்யும் கப்பல் மட்டுமே மாதந்தோறும் வந்து கொண்டிருக்கிறது. போதுமான சாத்திய கூறுகளைப்பொறுத்து தான் கப்பல் போக்குவரத்து தொடங்க முடியும் என்றார்.


Next Story