திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றும் பணி


திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகளை அகற்றும் பணி
x
தினத்தந்தி 23 July 2021 5:56 PM GMT (Updated: 2021-07-23T23:26:22+05:30)

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் குப்பைகளை அகற்றும் பணியை கலெக்டர் அமர் குஷ்வாஹா குப்பைகளை பெருக்கி தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

குப்பைகள் அகற்றும் பணி

திருப்பத்தூர் நகராட்சி பஸ்நிலையம் பின்புறம் அமைந்துள்ள பெரிய ஏரிக்கரையில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளையும், பாய்ச்சல் பசுமை நகர் நீர்நிலைப் பகுதிகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை தூய்மைப் பணியாளர்கள் மற்றும் எஸ்.ஆர்.டி.பி.எஸ். தொண்டு நிறுவனம் இணைந்து அகற்றி தூய்மைப்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா, எம்.எல்.ஏ.க்கள் ஏ.நல்லதம்பி, க.தேவராஜ் ஆகியோர் குப்பைகளை பெருக்கி தொடங்கி வைத்தனர். 

பின்னர் திருப்பத்தூர் குப்பைகளை தரம் பிரித்து உரமாக மாற்றும் மையத்தில் குப்பைகள் கொட்ட இடம் இல்லை என்றும், நாள்தோறும் சேகரிக்கும் குப்பைகளை மையத்தில் பிரித்து வருகிறோம் என்று சுகாதார அலுவலர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் நகராட்சி பவுச நகர் பகுதியில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை திட்ட குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தினை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டார்.

டிசம்பர் மாதத்துக்குள்

அப்போது 40 ஆண்டுகளாக சேகரிக்கப்பட்ட குப்பைகள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தரம் பிரிக்கும் பணி தனியார் மூலம் நடைபெற்று வருவதாகவும், 30 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும், இப்பணிகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்கப்படும் என்று தனியார் நிறுவன அதிகாரி தெரிவித்தார்.

தூய்மைப் பணியாளர்களுக்கு முககவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக வழங்கப்படுகிறதா என்றும், தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்களா என்றும் கலெக்டர் கேட்டறிந்தார்.  குப்பைகள் தரம் பிரிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் நகராட்சி பொறியாளர் மற்றும் துப்புரவு ஆய்வாளர்க்கு உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் தாசில்தார் சிவப்பிரகாசம், நகராட்சி பொறியாளர் உமாமகேஸ்வரி, பணி மேற்பார்வையாளர் சீனிவாசன், எஸ்.ஆர்.டி.பி.எஸ், தொண்டு நிறுவன இயக்குனர் தமிழரசி மற்றும் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை ஒன்றியம் பாச்சல் ஊராட்சி பசும்பொன் நகர் பகுதியில் நீர்நிலைகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் பணி நடந்தது. இதனை கலெக்டர் அமர் குஷ்வாஹா, ஜோலார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், உதவி பொறியாளர் கார்த்திகேயன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் எஸ்.கே.சதிஷ்குமார் உள்பட அரசு துறை அதிகாரிகள், தூய்மைப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாட்டறம்பள்ளி

இதேபோல் நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் தூய்மை திட்டப்பணி தொடக்க விழா நடந்தது. பேரூராட்சி செயல் அலுவலர் திருமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன், நாட்டறம்பள்ளி தாசில்தார் மகாலட்சுமி, நாட்டறம்பள்ளி பேரூராட்சி மேற்பார்வையாளர் தேவராஜ் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். பேரூராட்சி முழுவதும் அனைத்துத் தெருக்களும் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.

Next Story