திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ‘ரோப்கார்’ வசதி-அமைச்சர் சேகர்பாபு பேட்டி
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு ரோப்கார் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
எலச்சிபாளையம்,
திருச்செங்கோடு மலை மீது பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து செங்கோட்டு வேலவர், அர்த்தநாரீஸ்வரர், பெருமாள், நாகேஸ்வரர் சன்னதிகளில் அவர் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ஸ்தல மரம் மற்றும் தங்கத்தேரினை தரிசனம் செய்தார்.
அப்போது கோவில் அன்னதான திட்டத்தில் வேலை செய்பவர்கள் தங்களது ஊதியம் குறைவாக இருப்பதாகவும், அதனை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அமைச்சரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார். இதேபோல் திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில் தைப்பூசத்தையொட்டி தேரோட்டம் நடத்த வேண்டும் என்று தேசிய சிந்தனை பேரவை சார்பில் அமைசரிடம் மனு கொடுக்கப்பட்டது.
வரவேற்பு
இந்த ஆய்வின்போது சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் மங்கையர்க்கரசி, மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் டி.எம்.செல்வகணபதி, பி.ஆர்.சுந்தரம், கோவில் செயல் அலுவலர் (பொறுப்பு) சரவணன், ஆய்வாளர் இந்திரா ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக கோவிலுக்கு வந்த அறநிலையத்துறை அமைச்சருக்கு மேளதாளங்கள் முழங்க, பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
‘ரோப்கார்’ வசதி
தமிழகத்தில் உள்ள 5 மலை கோவில்களில் பக்தர்கள் வசதிக்காக ரோப்கார் அமைக்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தார். அதன்படி, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில், சோளிங்கர் நரசிம்மர் கோவில், திருநீர்மலை, திருத்தணி, திருச்சி உச்சி பிள்ளையார் கோவில்களில் ரோப்கார் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் 3-வது பெரிய தேரான 110 அடி உயரம் கொண்ட திருச்செங்கோடு தேரை புதுப்பித்து வைகாசி விசாக திருவிழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கோவில் குளமும் சீரமைக்கப்படும். விழாக்காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க தேவையான வாகனம் நிறுத்தும் வசதி குறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
புகார்கள்
அறநிலையத்துறை குறித்த புகார்களை தெரிவிக்க இணையதள பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் கிராம மக்கள் புகார் தெரிவிக்க சிரமப்படுவதால் தற்போது ‘கால்சென்டர்’ அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் ஒரே சமயத்தில் நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட புகார்களை 10 பேர் தெரிவிக்கலாம். இது சென்னைக்கு மட்டுமல்ல தமிழகம் முழுமைக்குமான திட்டமாகும்.
பேட்டியின்போது, தி.மு.க. ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதுரா செந்தில், நகர செயலாளர் கார்த்திகேயன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நதிராஜவேல், பொருளாளர் தங்கமுத்து, கொள்கை பரப்பு செயலாளர் நந்தகுமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story