நாமக்கல் மாவட்டத்தில் போலீசார் அதிரடி சோதனை: 2¾ டன் புகையிலை பொருட்கள், ரூ.7 லட்சம் பறிமுதல்-39 பேர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 2¾ டன் புகையிலை பொருட்கள் மற்றும் ரூ.7 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 39 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை அதிகரித்து வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாவட்டத்தில் சோதனை நடத்துமாறு போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு, சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. தாமரை கண்ணன் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிக்குமார், சுஜாதா, மணிமாறன், செல்லபாண்டியன் ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் உள்பட மாவட்டத்தில் 36 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். நாமக்கல் மற்றும் சுற்றுவட்டாரத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
2¾ டன் புகையிலை பொருட்கள் பறிமுதல்
அதில் மூட்டை, மூட்டையாக 1¾ டன் புகையிலை பொருட்களும், ரூ.7 லட்சத்து 16 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது. அங்கு பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அனைத்தும் நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. பரமத்திவேலூரில் போலீசாரின் அதிரடி சோதனையில் வீடு, கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1¾ லட்சம் மதிப்பிலான 190 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக பரமத்திவேலூர் பேட்டையை சேர்ந்த ராமசேகர் (வயது 62), வடக்கு தெருவை சேர்ந்த மதன்லால் (35) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் உள்பட மாவட்டம் முழுவதும் 36 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 2¾ டன் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.29 லட்சம் என போலீசார் தெரிவித்தனர். மேலும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கமல்ராஜ் (வயது 42), நைனா ராம் (32) உள்பட 39 பேரை போலீசார் கைது செய்தனர்.
குண்டர் சட்டம்
இதுகுறித்து நாமக்கல்லில் போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா? என்பது குறித்து திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில் 2,709 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல்லில் ரூ.7 லட்சத்து 16 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் மாவட்டத்தில் 39 பேர் கைது செய்யப்பட்டனர். புகையிலை பொருட்கள் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது?. எங்கிருந்து நாமக்கல்லுக்கு கொண்டு வரப்படுகிறது? என்பது குறித்து விசாரித்து வருகிறோம். புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story