அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
ஆடி முதல் வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்று அம்மனை வழிபட்டனர்.
கரூர்
ஆடி முதல் வெள்ளி வழிபாடு
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். அதிலும் ஆடி வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து அம்மனுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தினால் திருமண தடை நீங்கும், குழந்தை இல்லாதோருக்கு மகப்பேறு கிட்டும், வாழ்க்கையில் சகல துன்பங்களும் நீங்கி மகிழ்ச்சி பொங்கும் என்பது ஜதீகம்.
அந்தவகையில் நேற்று ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி கரூர் மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பன்னீர், தேன், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார்.
நீண்ட வரிசையில் நின்று தரிசனம்
இதேபோல கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். முன்னதாக அவர்கள் கோவிலின் முன்பு தீபமேற்றியும், சூடமேற்றியும், உப்பு வைத்தும் பயபக்தியுடன் வழிபாடு நடத்தினர். கோவிலின் முன்புற பகுதியில் பக்தர்கள் சார்பில் கூழ், பொங்கல், சுண்டல் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
இதேபோல் கரூர் பசுபதிபுரத்தில் உள்ள வேம்பு மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, நகை மற்றும் பூக்களால் சமயபுரம் மாரியம்மன் உருவத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதே போல் கரூரிலுள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை நடைபெற்றது.
லாலாபேட்டை
லாலாபேட்டை அருகே கள்ளபள்ளி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும்ஆடி மாதம் வெள்ளிக்கிழமையன்று காவிரியில் புனித நீராடி தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.
அதுபோல நேற்று காலை பக்தர்கள் காவிரியில் நீராடி, புனித நீர் எடுத்து வந்து அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். மாலை மாவிளக்கு போட்டு பக்தர்கள் அம்மனை வணங்கினர்.
தோகைமலை
தோகைமலை அருகே வெள்ளப்பட்டி மகா மாரியம்மன் கோவில், பாதிரிப்பட்டி மகா மாரியம்மன் கோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன.
வேலாயுதம்பாளையம்
கரூரில் உள்ள சோமு அங்காள பரமேஸ்வரி கோவிலில் உள்ள அம்மனுக்கு வெற்றிலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
வேலாயுதம்பாளையம் மலைவீதியில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் ஆடி
முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், குங்குமம் உள்பட பல்வேறு வாசனை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு பச்சை பட்டு உடுத்தி, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மலர் மற்றும் எலுமிச்சை மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகளும், தீபாராதனையும் நடந்தது. பின்னர் பெண்களுக்கு வளையல், குங்குமம் வழங்கப்பட்டது. இதேபோல நாணப்பரப்பு கோவில், தளவாப்பாளையம் மாரியம்மன் கோவில், தோட்டக்குறிச்சி மலையம்மன், மண்மங்கலம் புது காளியம்மன் ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி மாரியம்மன் கோவில், சின்ன மாரியம்மன் கோவில், மலைக்கோவிலூர் சிவசக்தி மாரியம்மன் கோவில், ஈசநத்தம் மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் காலையும், மாலையும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
நொய்யல்
புன்னம்சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள மாரியம்மன், பகவதி அம்மன், அங்காளம்மன் கோவில்களில் 18 வகையான வாசனை திரவியங்களால் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதேபோல சேமங்கி மாரியம்மன், அத்திப்பாளையம் பெரிய பொன்னாச்சி அம்மன், சின்ன பொன்னாச்சி அம்மன், நொய்யல் செல்லாண்டியம்மன், குந்தாணி பாளையம் நத்தமேடு அங்காளம்மன், கரியாம்பட்டி அங்காளம்மன், தவுட்டுப்பாளையம் மாரியம்மன், பகவதியம்மன் கோவில்களிலும் வழிபாடுகள் நடைபெற்றன.
Related Tags :
Next Story