ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு


ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 24 July 2021 12:52 AM IST (Updated: 24 July 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி, 

ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆடி வெள்ளி 

ஆடி மாதம் என்றாலேஅம்மனுக்கு உகந்த மாதமாகும். ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டால் அம்மன் குளிர்ந்த மனதோடு பக்தர்கள் கேட்கும் வரங்களை கொடுப்பதோடு சிறந்த நற்பலன்கள் உண்டாகும் என்பது ஐதீகம். ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறும்.

நேற்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை மற்றும் பவுர்ணமி ஒருசேர அமையப்பெற்ற நாள் என்பதால் திருச்சி திருவானைக்காவல் கோவிலில் அகிலாண்டேஸ்வரி அம்மன் தாழம்பூ பாவாடை அணிந்து மலர்கிரீடம் சூடி, காதுகளில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம் பொறிக்கப்பட்ட தாடகங்கள், கையில் தங்கக்கிளி மற்றும் திருஆபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதல் நள்ளிரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபட்டனர்.

பக்தர்கள் தரிசனம் 

ஆடிவெள்ளியையொட்டி திருவானைக்காவல் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு அதன்பின்னர் சிறு, சிறு, பூஜைகால இடைவெளிக்கு பின்னர் தொடர்ந்து நள்ளிரவு வரை சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றன. அம்பாள் காலையில் லட்சுமியாகவும், உச்சிகாலத்தில் பார்வதியாகவும், மாலையில் சரஸ்வதியாகவும் காட்சி தந்தார். 

ஆடிவெள்ளியை முன்னிட்டு திருவானைக்காவல் டிரங்க்ரோடு சன்னதிதெரு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து போலீசார் தடுப்புகள் அமைத்து பக்தர்கள் சிரமமின்றி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்து இருந்தனர்.

வெக்காளியம்மன்

ஆடி முதல் வெள்ளியையொட்டி திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். வெக்காளிஅம்மன் கோவிலுக்கு திருச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தீச்சட்டி எடுத்து வந்தனர். 

இதேபோல் மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து தரிசனம் செய்தனர். முககவசம் அணியாமல் வந்த பக்தர்களுக்கு அனுமதிமறுக்கப்பட்டது.

108 சேலை அலங்காரம்

இதுபோல் தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் நேற்று ஆடி முதல் வெள்ளிகிழமையை முன்னிட்டு காவிரியில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு மதுரைகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, உற்சவ அம்மனுக்கு 108 சேலை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சவுந்தர்ய பார்வதிக்கு சிறப்பு அபிஷேகம்

திருச்சியின் நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவிலில் சவுந்தர்ய பார்வதி அம்மனுக்கு ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். மேலும் கோவில் மண்டபத்தில் ஆலய அர்ச்சகர்கள் தலைமையில் லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடைபெற்றது.

காட்டுப்புத்தூர்

காட்டுப்புத்தூரில் மகா மாரியம்மன் கோவில் மற்றும் பிடாரி மதுரகாளியம்மன் கோவில்களில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று சிறப்பு அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். நேற்று ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை யொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. மேலும் மகா மாரியம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் துவரங்குறிச்சியில் உள்ள பூத நாயகி அம்மனுக்கு நேற்று மாலை மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த போது எடுத்தபடம்.

முசிறி, தா.பேட்டை

முசிறியில் மகாமாரியம்மன், அழகுநாச்சி அம்மன், தேவிகருமாரியம்மன், அங்காள பரமேஸ்வரிஅம்மன், பாலத்து மாரியம்மன், சின்ன சமயபுரத்தாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பொதுமக்கள் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு விளக்கு ஏற்றியும் வழிபட்டனர் இதேபோன்று தா.பேட்டை பகுதியில் உள்ள பெரிய மாரியம்மன், செல்லாண்டி அம்மன், உடைப்பு வாய் கருப்பண்ணசாமி, செங்குந்தர் மகாமாரியம்மன், ராஜகாளியம்மன் உள்ளிட்ட கோவில்களில் பொதுமக்கள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

Next Story