முக்கொம்பு அணை கட்டுமான பணிகள் அனைத்தும் டிசம்பரில் முடிந்துவிடும்- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி


முக்கொம்பு அணை கட்டுமான பணிகள் அனைத்தும் டிசம்பரில் முடிந்துவிடும்- அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
x
தினத்தந்தி 24 July 2021 12:52 AM IST (Updated: 24 July 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

முக்கொம்பு அணை கட்டுமான பணிகள் அனைத்தும் டிசம்பரில் முடிந்துவிடும் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

திருச்சி, 
முக்கொம்பு அணை கட்டுமான பணிகள் அனைத்தும் டிசம்பரில் முடிந்துவிடும் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

முக்கொம்பு அணை

திருச்சி மாவட்டம் முக்கொம்பு காவிரி ஆற்றில் கொள்ளிடம் கதவணையின் கீழ்புறம் புதிய கதவணை அமைக்கும் பணியினை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு செய்தார்.இதனை தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

முக்கொம்பில் அணை கட்டுமான பணிகள் கொரோனா காரணமாக தாமதமாகி விட்டது. இந்த பணிகள் மட்டுமின்றி அனைத்து பணிகளுமே கொரோனாவால் தாமதமாகி உள்ளது. தற்போது முக்கொம்பு மேலணை தொடர்பான அனைத்து பணிகளும் டிசம்பர் மாதத்துக்குள் முடிவடைந்துவிடும்.

வனஉயிரியியல் பூங்கா

முக்கொம்பு அணையை போல மேட்டூர் அணைக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட 
வாய்ப்புள்ளதா என்றால் இல்லை. முக்கொம்பில் உள்ள கொள்ளிடத்தின் மேல் கட்டப்பட்டுள்ள அணைக்கு 4 மாதம் தான் வேலை. ஆனால் மேட்டூர் அணைக்கோ 12 மாதமும் வேலை. எனவே மேட்டூர் அணை எப்போதும் பொதுப்பணித்துறையினரின் கண்காணிப்பில் தொடர்ந்து இருப்பதால் இதுபோன்று பாதிப்பு அங்கு ஏற்பட வாய்ப்பு இல்லை.

இனி வரும் காலங்களில் கட்டப்படும் தடுப்பணைகள் சாலை வசதியுடன் கட்டப்படும். திருச்சி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள வன உயிரியியல் பூங்கா விரிவாக்கம் செய்யும் பணியானது விரைவில் தொடங்கும். தற்போது முதற்கட்டமாக 6 யானைகள் அங்கு பராமரிக்கப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கலெக்டர் சிவராசு, நீர்வளத்துறை செயற்பொறியாளர் கீதா மற்றும் எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர். இதனை தொடர்ந்து திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம், நீதி கட்சியை சேர்ந்த சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் மணிமண்டபம் மற்றும் எம்.கே.தியாகராஜ பாகவதர் மணிமண்டபம் ஆகியவற்றை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.

1000 பேருக்கு வாரிசு வேலை

மேலும் நியூமோகோக்கல் நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி முகாம் மணப்பாறையை அடுத்த மரவனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆகியோர் முகாமை தொடங்கி வைத்து, மகப்பேறு ஊட்டச்சத்து பெட்டகத்தை பெண்களுக்கு வழங்கினர்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறும்போது, இந்தவார இறுதியில் நகர்ப்புற வளர்ச்சி துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு 1,000 பேருக்கு மேலாக வாரிசு அடிப்படையில் பணி ஆணையை முதல்-அமைச்சர் வழங்குகிறார். வாரிசு அடிப்படையில் பணி வழங்கப்பட்ட பின்னர் நிதிநிலைக்கு ஏற்ப மற்ற காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறினார்.

Next Story