இந்து முன்னணியினர் ஆலய நுழைவு போராட்டம்; 60 பேர் கைது


இந்து முன்னணியினர் ஆலய நுழைவு போராட்டம்; 60 பேர் கைது
x
தினத்தந்தி 24 July 2021 1:15 AM IST (Updated: 24 July 2021 1:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 60 பேர் கைது செய்யப்பட்டனர். 

இந்து முன்னணியினர் போராட்டம்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் கோவிலில் ஆடித்தபசு திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் அறிவித்து இருந்தது. 
இதை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆலய நுழைவு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர். இதையொட்டி நேற்று கோவில் ரதவீதிகளை சுற்றி பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாதவாறு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். 

தள்ளுமுள்ளு 

இந்த நிலையில் ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபடுவதற்காக, இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில் மாநில செயலாளர் குற்றாலநாதன் உள்ளிட்டோர் சங்கரன்கோவில் தேரடி திடலில் திரண்டனர். அப்போது அவர்கள் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோவிலுக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் சிறிது தொலைவிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

60 பேர் கைது 

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 60 பேரை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலிவரதன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.  முன்னதாக வி.பி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழக அரசு மத சுதந்திரத்தில் ஒரு கண்ணில் வெண்ெணயையும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்து வருகிறது. இந்து பண்டிகைக்கு மட்டும் அனுமதி மறுத்தது ஏன்? திருப்பதி கோவிலில் விதிமுறைகளுக்கு உட்பட்டு திருவிழா நடக்கிறது. அதேபோல் தமிழகம் முழுவதும் இந்து விழாக்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கக்கூடாது’ என்றார். கைதான அனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story