அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது


அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
x
தினத்தந்தி 23 July 2021 8:05 PM GMT (Updated: 2021-07-24T01:36:04+05:30)

ஆடி முதல் வெள்ளியையொட்டி அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பெரம்பலூர்,

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கினால் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மூடப்பட்டிருந்ததால், அம்மன் கோவில்களில் நடந்த ஆடி மாத வழிபாட்டில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் சிறிய அம்மன் கோவில்கள் திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
இந்த ஆண்டு கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கினால் மூடப்பட்டிருந்த கோவில்கள், பின்னர் அளிக்கப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து கடந்த 5-ந்தேதி முதல் திறக்கப்பட்டன. இதையடுத்து பக்தர்கள் ேகாவிலுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு நேற்று பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மதுரகாளியம்மன் கோவில்
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் திங்கள், வெள்ளிக்கிழமை, பவுர்ணமி, அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் நடை திறக்கப்படுவது வழக்கம். நேற்று வெள்ளிக்கிழமை, பவுர்ணமி மற்றும் ஆடி தபசு என்பதால் கோவிலில் காலை 6 மணியளவில் நடை திறக்கப்பட்டது.
மேலும் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை என்பதால் காலை முதலே பக்தர்கள் கூட்டம், கூட்டமாக கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். பின்னர் அவர்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மதியம் உச்சிகால பூஜை நடைபெற்றது.
பயபக்தியுடன் தரிசனம்
இதில் பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற தாங்கள் கொண்டு வந்த எண்ணெய், நெய் ஆகியவற்றை கோவில் வளாகத்தில் இருந்த வாடா விளக்கில் ஊற்றினர். கோவிலில் பக்தர்களின் கூட்டத்தை சமாளிக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதேபோல் பெரம்பலூர் துறைமங்கலம் புது காலனியில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெரம்பலூர் நகரில் பூசாரித்தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு பால், பழவகைகள், சந்தனம், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகங்களும், ஒவ்வொரு அபிஷேகத்தை தொடர்ந்து தீபாராதனையும் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சீர்வரிசைகளை வைத்து படையல் செய்து அம்மனை வழிபட்டனர்.
பாடாலூர்
ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் அருகே செட்டிகுளம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோவிலில் சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் செட்டிகுளம், நாட்டார்மங்கலம் பொம்மனப்பாடி, குரூர், சிறுவயலூர், பெரகம்பி, கூத்தனூர், இரூர், பாடாலூர், ஆலத்தூர்கேட் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story