தமிழக கோவில்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட மாட்டாது
மக்களிடையே பா.ஜனதா குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும், தமிழக கோவில்கள் தனியாா் வசம் ஒப்படைக்கப்பட மாட்டாது எனவும் சேலத்தில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சேலம்,
மக்களிடையே பா.ஜனதா குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும், தமிழக கோவில்கள் தனியாா் வசம் ஒப்படைக்கப்பட மாட்டாது எனவும் சேலத்தில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஆய்வு
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று சேலம் வந்தார். அவர், 2019-ம் ஆண்டு தொடங்கி நடந்து வரும் சேலம் சுகவனேசுவரர் கோவில் திருப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கோட்டை மாரியம்மன் கோவிலில் ரூ.2½ கோடியில் நடந்து வரும் விமானத்துடன் கூடிய கர்ப்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், சுற்று பிரகாரம் உள்ளிட்ட கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டு அந்த பணிகளை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.
பேட்டி
இதைதொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் ரூ.10 லட்சத்திற்கு மேல் வருவாய் உள்ள 539 கோவில்களில் ஆகம விதிகளின்படி திருப்பணிகள் மேற்கொள்ள மெகா திட்டம் (மாஸ்டர் பிளான்)் தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின் மூலம் கோவில்களில் தூய்மை பணி, நந்தவனம், தேர் நிறுத்தும் இடம், தெப்பக்குளம், தலவிருச்ச மரம் நடுதல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் செய்யப்படும்.
அறநிலையத்துறை கோவில்களுக்கு சொந்தமான 50 ஆயிரம் இடங்களில் வாடகை வசூல் நிலுவையில் உள்ளது. அதனை வசூலிக்கும் பணியும், கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும் நடந்து வருகிறது. வருவாயை பெருக்க கோவில் நிலங்களை குத்தகைக்கு விடுவது, நிறுவனங்களுக்கு வாடகைக்கு கொடுப்பது போன்ற பணிகள் வெளிப்படை தன்மையோடு மேற்கொள்ளப்படும்.
தங்க பிஸ்கட்டுகளாக...
தமிழக கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்க நகைகள் கடந்த 9 ஆண்டுகளாக உருக்கப்படாமல் உள்ளது. கோவில்களின் தேவைக்கு போக மீதமுள்ள நகைகளை உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த தங்க பிஸ்கட்டுகளை வைப்பு நிதியாக வைத்து 2.5 சதவீத வட்டி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.20 கோடி அளவிற்கு வட்டி கிடைக்கும். இந்த பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் தனிக்குழு ஏற்படுத்தப்படும்.
தனியார் வசம் கிடையாது
அறநிலையத்துறை கோவில்கள் தனியார் சொத்துக்கள் அல்ல. கோவில்கள் அனைத்தும் மன்னராட்சி காலத்தில் கட்டப்பட்டது. கோவில் நிலங்கள் அனைத்தும் ஜமீன்தாரர்கள், செல்வந்தர்களால் தானமாக வழங்கப்பட்டது.
மன்னர் ஆட்சி முடிந்து மக்களாட்சி வந்த பிறகு பிரசித்தி பெற்ற கோவில்களை அரசு நிர்வகிக்கிறது. இப்படி இருக்கையில் தனியாருக்கு கோவில்களை கொடுக்க வேண்டும் என்று பா.ஜனதா கூறுவது எப்படி சரியாகும்? கோவில்களை யார் நிர்வகிப்பது என்று டெண்டரா விட முடியும்?. தமிழக கோவில்கள் எவையும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட மாட்டாது.
இந்த விவகாரத்தில் பொதுநல வழக்கு தொடர்வது, மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி தங்களை முன்னிறுத்தி கொள்வதற்காக பா.ஜனதா நடத்தும் நாடகம். குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அதை நிவர்த்தி செய்ய அரசு தயாராக உள்ளது. அதைவிடுத்து மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.
பணி நிரந்தரம்
தமிழகத்தில் கடந்த வாரத்தில் திருட்டு போன 6 சிலைகளில் 4 சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள சிலை திருட்டு வழக்குகளை கண்டறியவும், வெளிநாடுகள், பிற மாநிலங்களில் இருந்து சிலைகளை மீட்கவும், குற்றவாளிகளை கூண்டோடு கைது செய்யவும் தனித்திட்டம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க உள்ளார்.
இந்து சமய அறநிலையத்துறையில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதனை நிரப்பவும், 5 ஆண்டுகளுக்கு மேல் கோவில்களில் தற்காலிக ஊழியர்களாக பணிபுரிந்து வருவோரை பணிநிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்றாய பெருமாள் கோவில்
இதைத்தொடர்ந்து ஓமலூர் பாகல்பட்டி சென்றாய பெருமாள் கோவிலில் 11 ஆண்டுகளாக நடந்து வரும் திருப்பணிகளை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு அவற்றை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். சென்றாய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான 213 ஏக்கர் நில ஆக்கிரமிப்புகளை மீட்டு கோவில் வசம் கொண்டு வரவும், கோவில் நகைகள் மற்றும் சொத்துக்கள் அனைத்தையும் சரிபார்க்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் புஜங்கீஸ்வரர் கோவில், சங்ககிரியில் சோமேஸ்வரர் மற்றும் சென்னகேசவ பெருமாள் கோவில்களிலும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி, அருள் எம்.எல்.ஏ., ஓமலூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வக்குமரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் கருணாகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story