கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மைசூரு: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இதேபோல, கபினி, கே.ஆர்.எஸ். அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் தொடர்ந்து இடைவிடாது பலத்த மழை பெய்து வருவதால், இரு அணைகளுக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அதேபோல, இரு அணைகளில் இருந்தும் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கே.ஆர்.எஸ்., கபினி
மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணாம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 124.80 அடி ஆகும். நேற்று மதியம் நிலவரப்படி கே.ஆர்.எஸ். அணையில் 104.15 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 25,671 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 6,208 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதேபோல, மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ள கபினி அணையின் நீர்மட்டம் 2,284 அடி (கடல் மட்டத்தில் இருந்து) ஆகும். நேற்று மதியம் நிலவரப்படி கபினி அணையில் 2,280.81 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 25,480 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
36 ஆயிரம் கனஅடி நீர்
இரு அணைகளில் இருந்தும் நேற்று தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 36,208 கனஅடி திறந்து விடப்பட்டுள்ளது. கபினியில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் கபிலா ஆற்றின் வழியாகவும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி வழியாகவும் சென்று டி.நரசிப்புரா அருகே திருமாகூடலு பகுதியில் ஒன்றாக சங்கமித்து அகண்ட காவிரியாக தமிழகம் நோக்கி செல்கிறது.
Related Tags :
Next Story