சார்-பதிவாளர் அலுவலகத்தில் போலி முத்திரை பயன்படுத்திய வழக்கு: ஐகோர்ட்டில், போலீசார் முதற்கட்ட விசாரணை அறிக்கை தாக்கல்
சார்-பதிவாளர் அலுவலகங்களில் போலி முத்திரை பயன்படுத்திய வழக்கில் ஐகோர்ட்டில், போலீசார் முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இவ்வழக்கின் விசாரணை அடுத்த மாதம்(ஆகஸ்டு) 24-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு: சார்-பதிவாளர் அலுவலகங்களில் போலி முத்திரை பயன்படுத்திய வழக்கில் ஐகோர்ட்டில், போலீசார் முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இவ்வழக்கின் விசாரணை அடுத்த மாதம்(ஆகஸ்டு) 24-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
போலி முத்திரை
பெங்களூரு எலகங்கா, சிவாஜிநகர் உள்பட நகரில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகங்களில் போலி முத்திரை மற்றும் ஆவணங்களை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும், இதன் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறி அல்சூர்கேட் போலீஸ் நிலையத்தில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி கடந்த ஆண்டு (2020) டிசம்பர் மாதம் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
பின்னர் இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.
அதன்பேரில், சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், இந்த முறைகேடு தொடா்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிடக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் நாராயணா என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா தலைமையில் நடைபெற்று வருகிறது.
அறிக்கை தாக்கல்
இந்த வழக்கு குறித்து முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படி சிறப்பு விசாரணை குழு போலீசாருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அதன்பேரில், அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் விஜய்குமார் பட்டீல் ஐகோர்ட்டில் முதற்கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கில் புகார் அளித்தவர் கொடுத்த தகவலின் பேரில் முறைகேடு சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட ஒருவரை விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியும், அவர் ஆஜராகவில்லை. அவரை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் சிறப்பு விசாரணை குழு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி ஆதாரங்களை திரட்டி வருவதால், வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை என்றும் வக்கீல் விஜய்குமார் பட்டீல் தெரிவித்திருந்தார். இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அடுத்த மாதம்(ஆகஸ்டு) 24-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story