வெள்ளம் பாதித்த பகுதிகளில் நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு மந்திரி சுதாகர் உத்தரவு
வெள்ளம் பாதித்த பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மந்திரி சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு: வெள்ளம் பாதித்த பகுதிகளில் நோய் பரவாமல் தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு மந்திரி சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.
மருந்துகளை தெளிக்க வேண்டும்
சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் தனது துறை அதிகாரிகளுடன் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நோய்கள் பரவாமல் தடுக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் அவர் பேசியதாவது:-
கர்நாடகத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மழைநீர் தேங்கும் இடங்களில் தொற்று நோய் பரவும் ஆபத்து உள்ளது. இந்த தொற்று நோய்கள் பரவவலை தடுக்க, வெள்ளம் தேங்கிய பகுதிகளில் மருந்துகளை தெளிக்க வேண்டும். மேலும் பொதுமக்களிடம் நோய் பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
முகக்கவசங்கள்
குறிப்பாக மூத்த குடிமக்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளின் விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கொரோனா பரவலின் 2-வது அலை இன்னும் முடியவில்லை. அதனால் வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொதுமக்களுக்கு முகக்கவசங்கள், சானிடைசர் வழங்க வேண்டும். இந்த ஆண்டு சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்கள் பரவல் குறைவாக உள்ளது. ஆயினும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் இல்லாவிட்டால், நடமாடும் மருத்துவ மையங்களை தொடங்க வேண்டும். வெள்ளம் அதிகம் பாதித்த மாவட்டங்களில் கண்காணிப்பு அதிகரிகளை நியமனம் செய்து, மக்களின் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு சுதாகர் கூறினார்.
இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் அருந்ததி சந்திரசேகர், கமிஷனர் திரிலோக் சந்திரா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story