டுவிட்டர் நிர்வாக இயக்குனருக்கு உத்தரபிரதேச போலீஸ் அனுப்பிய நோட்டீசு ரத்து; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
ஜெய்ஸ்ரீராம் என்று கூறுமாறு தாக்கியதாக பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ தொடர்பான வழக்கில் டுவிட்டர் நிர்வாக இயக்குனருக்கு உத்தரபிரதேச போலீஸ் அனுப்பிய நோட்டீசை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: ஜெய்ஸ்ரீராம் என்று கூறுமாறு தாக்கியதாக பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ தொடர்பான வழக்கில் டுவிட்டர் நிர்வாக இயக்குனருக்கு உத்தரபிரதேச போலீஸ் அனுப்பிய நோட்டீசை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மத கலவரத்தை தூண்டும்...
உத்தரபிரதேசத்தை சேர்ந்த சமத் சபி என்பவர் கடந்த ஜூன் மாதம் 5-ந் தேதி, தன்னை சிலர் ஜெய் ஸ்ரீராம் என்று கூறும்படி கூறி தாக்கியதாக ஒரு வீடியோவை பதிவிட்டு டுவிட்டரில் வெளியிட்டார். இந்த வீடியோவை காங்கிரசார் உள்பட பலர் தங்களின் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தனர். மத கலவரத்தை தூண்டும் நோக்கத்தில் அந்த வீடியோவை பரப்பியதாக கூறி உத்தரபிரதேசத்தை சேர்ந்த காசியாபாத் போலீசார் டுவிட்டர் நிறுவனம் உள்பட பலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக டுவிட்டர் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குனராக பணியாற்றி வரும் மணீஷ் மகேஷ்வரி உத்தரபிரதேச போலீசார் நோட்டீசு அனுப்பி ஜூன் 24-ந் தேதி விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறினர்.
நோட்டீசு ரத்து
தனக்கு அனுப்பியுள்ள உத்தரபிரதேச போலீசின் இந்த நோட்டீசை ரத்து செய்ய கோரி பெங்களூருவில் தங்கி இருக்கும் மணீஷ் மகேஷ்வரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு மீது நீதிபதி நரேந்தர் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நியைில் அந்த மனு நேற்று நீதிபதி நரேந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பினரும் தங்களின் வாதங்களை எடுத்து வைத்தனர்.
பிறகு டுவிட்டர் நிர்வாக இயக்குனருக்கு உத்தரபிரதேச போலீசார் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். நீதிபதி கூறுகையில், "மனுதாரருக்கு எதிரான புகாரில் ஆதாரங்களை உத்தரபிரதேச போலீசார் வழங்கவில்லை. தவறான நோக்கத்துடன் நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது. அதனால் இந்த நோட்டீசை ரத்து செய்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story