பூட்டிய வீட்டிற்குள் பிணமாக கிடந்த மாநகராட்சி பெண் ஊழியர்


பூட்டிய வீட்டிற்குள் பிணமாக கிடந்த மாநகராட்சி பெண் ஊழியர்
x
தினத்தந்தி 24 July 2021 3:03 AM IST (Updated: 24 July 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் மாநகராட்சி பெண் ஊழியர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவருடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்தவரும் பலியானதால், பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

வடவள்ளி

கோவை அருகே பூட்டிய வீட்டிற்குள் அழுகிய நிலையில் மாநகராட்சி பெண் ஊழியர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவருடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வந்தவரும் பலியானதால், பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

அழுகியநிலையில் கிடந்த உடல்

கோவையை அடுத்த வடவள்ளி கருப்பராயன்கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வடவள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

 அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது வீட்டின் கதவு உள்புறமாக பூட்டி இருந்தது. இதையடுத்து வீட்டின் கதவை உடைத்து  போலீசார் உள்ளே சென்றனர்.

அப்போது, அங்குள்ள ஒரு அறையில் பெண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். தொடர்ந்து போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

 தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தது கருப்பராயன்கோவில் வீதியை சேர்ந்த நித்யா (வயது 40) என்பதும், இவர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.

போலீசார் விசாரணை

தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நித்யா தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? அவரின் சாவுக்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தினர். 

 இதில் நித்யாவுக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளதும், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்துவிட்டதும் தெரியவந்தது.
இந்த நிலையில் நித்யா உக்கடம் சி.எம்.சி.காலனியை சேர்ந்த செந்தில்குமார் என்பவருடன் திருமணம் செய்யாமல் கடந்த 3 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். 

இதில் செந்தில்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். மேலும் செந்தில்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் கால் துண்டிக்கப்பட்டது. இந்த வேதனையில் அவர் குடி பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து செந்தில்குமார் குறித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர் கடந்த 21-ந் தேதி சி.எம்.சி.காலனியில் உள்ள வீட்டில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதும் தெரியவந்தது.

பிரேத பரிசோதனை அறிக்கை

இதுகுறித்து வடவள்ளி மற்றும் உக்கடம் போலீசார் கூறும்போது, 
நித்யா இறந்து 5 நாட்கள் இருக்கலாம். அதன்பிறகு செந்தில்குமார் இறந்து உள்ளார். எனவே இந்த வழக்கில் செந்தில்குமார் மீது சந்தேகம் உள்ளது.

 ஆனால் அவர் உயிரோடு இல்லாததால் நித்யாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே அவர் இறப்புக்காக காரணம் குறித்து தெரியவரும் என்றனர்.  இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story