1,369 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியில் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் நாசர் வழங்கினார்
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் 1,369 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் நாசர் வழங்கினார்.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தில் பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பரிசீலித்து தீர்வுகாணப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக பால்வளத் துறை அமைச்சர் நாசர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 16 ஆயிரத்து 421 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதுநாள் வரையில் 14 ஆயிரத்து 139 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதில் 3 ஆயிரத்து 17 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மீதமுள்ள 10 ஆயிரத்து 641 மனுக்கள் பல்வேறு நடவடிக்கையின் பொருட்டு பரிசீலனையில் உள்ளது. 2 ஆயிரத்து 763 மனுக்கள் நிலுவையில் உள்ளது. மேற்படி பெறப்பட்ட மனுக்களில் இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, மின்னணு குடும்ப அட்டைகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் தையல் எந்திரம் மற்றும் பசுமை வீடுகள் என மொத்தம் 1,369 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியில் நலத்திட்ட உதவிகள் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, சுதர்சனம், கோவிந்தராஜன், சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வித்யா, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜோதி, தி.மு.க.வின் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி பூபதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story