டீ கடையில் கியாஸ் கசிவால் தீ விபத்து
புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் டீ கடையில் கியாஸ் கசிவால் தீப்பிடித்து எரிந்தது.
திரு.வி.க. நகர்,
சென்னை புளியந்தோப்பு நாராயணசாமி தெருவைச் சேர்ந்தவர் சாகுல் அமீது (வயது 30). இவர், புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் டீ கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் குல்சார் உசைன் (19) என்பவர் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். அப்போது கியாஸ் சிலிண்டரை சரியாக மூடாமல் சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனால் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்து கடை முழுவதும் பரவி இருந்தது.
இது தெரியாமல் குல்சார் உசைன் நேற்று அதிகாலை 5 மணியளவில் கடையை திறந்து, மின்சார ‘சுவிட்ச்சை ஆன்’ செய்தார்.
அப்போது கடை முழுவதும் கியாஸ் பரவி இருந்ததால், பயங்கர சத்தத்துடன் குப்பென்று தீப்பிடித்தது. இந்த அதிர்வில் கடையின் முன்புறம் இருந்த சுவர் இடிந்து விழுந்ததுடன், கடையில் இருந்த பொருட்கள் வெளியே தூக்கி வீசப்பட்டது.
மேலும் கடையில் இருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடையில் எரிந்த தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் குல்சார் உசைன், பலத்த தீக்காயம் அடைந்தார். அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி புளியந்தோப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story