தனியார் கம்பெனியில் மேற்கூரை அமைக்கும்போது 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
தனியார் கம்பெனியில் கட்டப்பட்டு வரும் குடோனுக்கு மேற்கூரை அமைக்கும்போது சுமார் 40 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பெரம்பூர்,
சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் 1-வது தெருவில் கோபாலபுரத்தைச் சேர்ந்த விஜய்பாபு என்பவருக்கு சொந்தமான கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு தனியாக சுமார் 40 அடி உயரத்தில் ராட்சத குடோன் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணியை என்ஜினீயர் ஜோஸ்வா என்பவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். ராட்சத குடோனுக்கு மேற்கூரை அமைக்கும் பணியில் கொருக்குப்பேட்டை இளையமுதலி தெருவைச் சேர்ந்த சத்யா என்ற பாக்யராஜ் (வயது 35) மற்றும் அவருடைய அண்ணன் ஜெயபால் ஆகியோர் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று காலை சத்யா, சுமார் 40 அடி உயரத்தில் ஏறி மேற்கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது திடீரென அங்கிருந்து தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் தலை, முகம், கழுத்து, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் படுகாயம் அடைந்த சத்யாவை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சத்யாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தண்டையார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.பலியான சத்யாவுக்கு திருமணமாகி தீபா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகனும் உள்ளனர்.
Related Tags :
Next Story