பாலாறு, நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை- கலெக்டர் எச்சரிக்கை
பாலாறு மற்றும் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வாணியம்பாடி
பாலாறு மற்றும் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தூய்மைப்படுத்த நடவடிக்கை
திருப்பத்தூர் மாவட்டத்தைத் தூய்மைப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சாலையோரம், நீர்நிலைகளில் கொட்டப்படும் கழிவுகள் அகற்றப்படுகிறது.
வாணியம்பாடி-வளையாம்பட்டு பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்ட குப்பைகள் தரம் பிரித்து உரம் தயாரிக்கும் நகராட்சி கிடங்கில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
கலெக்டர், நகராட்சி அதிகாரிகளிடம் நகரை தூய்மைப் படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும், நாளொன்றுக்கு 5 வார்டுகள் அல்லது 10 வார்டுகளில் முழுமையாக தூய்மைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தர விட்டார்.
அதைத்தொடர்ந்து ஜாப்ராபாத் பகுதியில் பாலாற்றில் கட்டி உள்ள தடுப்பணையை பார்வையிட்டு அங்கிருந்து ஏரிகளுக்கு செல்லக்கூடிய கால்வாய்களை விரைவில் சீரமைக்கவும், கால்வாய்களில் தேங்கி உள்ள குப்பை கழிவுகளை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது கலெக்டர் அமர்குஷ்வாஹா நிருபர்களிடம் கூறியதாவது:-
சரியாக யாரும் செய்யவில்லை
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் உள்ள குப்பைகளை அகற்ற எந்தத் திட்டமும் இல்லை. ஆனால் மாவட்டம் முழுவதும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கிராம புறங்களிலும் தூய்மைப் படுத்தும்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக தூய்மைப்படுத்தும் பணிகளை கடந்த 10 ஆண்டுகளாக சரியாக யாரும் செய்யவில்லை. தற்போது தூய்மைப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வீடுகளுக்கு நேரடியாக சென்று குப்பைகள் பெறப்பட்டு வருகிறது. வார்டு வாரியாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டும், கழிவுநீர் கால்வாய்கள் தூய்மைப்படுத்தும் பணிகள் 70 சதவீதம் முடிந்துள்ளது.
பாலாறு மற்றும் நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், மணவாளன், பேரூராட்சி செயல் அலுவலர் சேகர், சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாசன், அலி, சத்தியமூர்த்தி மற்றும் நகராட்சி ஊழியர்கள், வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story